தாய்லாந்து முன்னாள் பிரதமர் மீது அதிகார துஷ்பிரயோக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மீது, பதவிக் காலத்தின்போது அலட்சியமாக செயல்பட்டது, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பான வழக்கு விசாரணை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

யிங்லக் ஷினவத்ராவின் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட அரிசி மானியத் திட்டத்தால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக அரசியல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

இந்த நிலையில், அந்த அரிசி மானியத் திட்ட விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக அந்த நாட்டு அரசு யிங்லக் ஷினவத்ரா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான யிங்லக், தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

இதுதொடர்பான தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக வரும் ஜூலை மாதம் 3-ஆம் தேதி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

9 லட்சம் டாலர் (சுமார் ரூ.5.6 கோடி) பிணைத் தொகையை அவர் செலுத்தினார். அதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

வழக்கின் விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.

யிங்லக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

-http://www.dinamani.com