தண்டுவடத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்டும் உயிர் பிழைத்தவர்!

4சாலை விபத்தில் தண்டுவடத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்ட பின்னரும் சதை, திசுக்களால் ஆன தொடர்புடன் பிரிட்டனில் ஓர் இளைஞர் உயிர் வாழ்கிறார்.

இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவரின் அரிய வகை அறுவைச் சிகிச்சையினால் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
நியூகாஸில் நகரைச் சேர்ந்த டோனி கோவன் (29) கடந்த ஆண்டு செப்டம்பரில் வாகன விபத்தில் சிக்கினார்.

விளக்குக் கம்பத்தில் மோதிய நசுங்கிய காரிலிருந்து அவரை மீட்டபோது, அவருக்கு இதயத் துடிப்பு இருக்கவில்லை.
சம்பவ இடத்திலேயே அவருக்கு அளிக்கப்பட்ட முதல் உதவியால் அவரது இதயம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்தபோது, தண்டுவடத்திலிருந்து தலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது தெரிய வந்தது.
பின்கழுத்துப் பகுதியில் உள்ள தசை, திசுக்கள் மட்டுமே அவரது துண்டிக்கப்பட்ட தûலையை உடலுடன் சேர்த்து வைத்திருந்தன.
டோனி உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் முதலில் கூறினர்.

எனினும் அவருக்கு சிகிச்சை அளித்த அனந்த் காமத் என்கிற இந்திய வம்சாவளி மருத்துவர் புதுமையான யோசனையைத் தெரிவித்தார்.
உலோகத் தகடுகள், திருகாணிகளைப் பயன்படுத்தி, தலைப் பகுதியை கழுத்துப் பகுதியுடன் சேர்த்து உறுதியாக வைக்க அவர் முடிவு செய்தார்.

அதற்கான அரிய வகை அறுவைச் சிகிச்சையை அவர் செய்து முடித்ததையடுத்து, டோனி கோவனின் தலையும் தண்டுவடமும் இணைக்கப்பட்டன.
தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த டோனி கோவன், விரைவில் வீடு திரும்ப இருக்கிறார்.

அவரது தேவைக்கேற்ற மருத்துவ வசதிகள் உள்ள வீட்டை அமைக்க அவருடைய குடும்பத்தினர் நிதி திரட்டி
வருகின்றனர்.

-http://www.dinamani.com