குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவும் விளையாட்டுப் பொம்மைகளை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் உருவாக்கியுள்ளது.
இவற்றுக்கான காப்புரிமைக்கு அந்த நிறுவனம் விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் பயன்படுத்தும் கரடி, முயல் பொம்மைகள் போல, பல்வேறு வடிவங்களில் உள்ள விளையாட்டுப் பொம்மைகளின் உள்ளே அதிநவீன கேமராக்கள், நுண்ணுணர்வுக் கருவிகள், ஒலிபெருக்கிகள், டிரான்ஸ்மிட்டர்கள், மோட்டார்கள் உள்ளிட்டவற்றைப் பொருத்தி, அவற்றின் மூலம் திரட்டும் தகவல்கள் இணையதளத்தில் இணைக்கப்படும்.
இதன் மூலம், அந்த பொம்மை உள்ள இடத்தை அதன் உரிமையாளர் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க முடியும். இணையதளத் தகவல் சர்வர்களிலிருந்து கிடைக்கும் எச்சரிக்கைகளையடுத்து, செல்லிடப்பேசி உள்ளிட்ட ரிமோட் கன்ட்ரோல் சாதனங்கள் மூலம், அந்த பொம்மைக்கு கட்டளைகள் இடவும் இயலும்.
அவ்வாறு இடப்படும் கட்டளைகளால் பொம்மையை அசையச் செய்து செயலாற்ற வைக்கவும், அதில் பொருத்தியுள்ள ஒலிபெருக்கி மூலம் கட்டளையிடுபவரின் குரலை ஒலிக்கச் செய்து, பேசுவது போலச் செய்யவும் முடியும்.
இது போன்ற பொம்மைகள் மூலம், தொலைவிலிருந்து வேறு பல வீட்டுப் பொருள்களை இயக்கவும் பயன்படுத்தலாம் என கூகுள் தனது காப்புரிமை விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
-http://www.dinamani.com