தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து தாக்குதல்களை நிகழ்த்தி வரும் அவுஸ்திரேலிய நாட்டு குடிமக்களின் குடியுரிமையை பறிக்க புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அந்நாட்டு பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் டோனி அப்பாட், சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கங்களுடன் இணையும் அவுஸ்ரேலியா குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து ராணுவத்திற்கு எதிராக சுமார் 100 அவுஸ்திரேலிய தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த சுமார் 150 நபர்கள் போதிய வசதிகளை ஏற்படுத்தி தருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்படும் 50 சதவிகித அவுஸ்திரேலியர்களில் 40 சதவிகிதத்தினருக்கு ‘இரண்டு நாடுகளின் குடியுரிமை’ இருப்பதாக தெரியவந்துள்ளது.
இவர்களை ஒடுக்கும் வகையில், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ராணுவங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் அவுஸ்திரேலிய தீவிரவாதிகளின் ‘இரட்டை குடியுரிமையை’ அதிரடியாக பறிக்க உள்ளதாக பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டத்திற்கான விதிமுறைகளை இன்னும் ஓரிரு வாரங்களில் தயார் செய்து உடனடியாக அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான அவுஸ்திரேலிய பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கை அவுஸ்திரேலிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
-http://world.lankasri.com