ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க புதிய முயற்சி: அதிரடி திட்டத்தை வெளியிட்ட பிரான்ஸ் பிரதமர்

frnace_isis_001இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கண்காணிக்க புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக பிரான்ஸ் பிரதமரான மேனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Dauphine பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை மூளை சலவை செய்யும் ஜிகாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது.

தற்போதைய அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஐ.எஸ் தீவிரவாதிகள் இளைஞர்களை எளிதில் தொடர்புக்கொண்டு அவர்களை தங்களின் வலைக்குள் விழ வைக்கிறார்கள்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த முயற்சியை முறியடிக்கும் விதத்தில், இணையதளங்கள் மூலமாக அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இதற்கு, அனுபவம் வாய்ந்த, அதிநவீன தொழில்நுட்பங்கள் தெரிந்த ‘ஹேக்கர்களை’(Hackers) பணியில் அமர்த்தி தீவிரவாதிகளை கண்காணிக்க உள்ளதாக பிரதமர் மேனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் இளைஞர்களை தீவிரவாதிகள் மூளை சலவை செய்வதற்குள் ’ஹேக்கர்கள்’ எளிதில் கணனி மற்றும் இணையதளங்களுக்குள் ஊடுருவி ஜிகாதிகளை அடையாளம் கண்டு அவர்களின் முயற்சிகளை முறியடிப்பார்கள்.

பாரீஸ் பத்திரிகை தாக்குதலுக்கு உள்ளானதற்கு பிறகு, தீவிரவாதத்தை தடுக்கும் வகையில், சுமார் 60 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாமர மக்கள் பயன்படுத்தும் இணையதளங்களை தீவிரவாதிகளும் எளிதில் பயன்படுத்தி சர்வதேச அளவில் தங்களுடைய இயக்கங்களுக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகளின் இந்த முயற்சியை முறியடிக்கவே தற்போது புதிதாக ஹேக்கர்களை பணியில் அமர்த்த உள்ளதாக மேனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் தொடக்கத்தில் வெளியான புள்ளி விபரத்தின் படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 1,683 பேர் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com