அகதிகளுக்கு அனுமதி வழங்கும் திட்டத்தில் திருத்தம்: ஐரோப்பிய ஆணையத்திற்கு கோரிக்கை

libia_refugee_001வெளிநாடுகளிலிருந்து தஞ்சம் கோரி வருபவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் வரையறுத்துள்ள ஒதுக்கீட்டில் திருத்தம் வேண்டும் என ஜேர்மனி கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் கோரி வரும் வெளிநாட்டினர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து கடந்த மாதத்தில் இத்தாலிக்கு தஞ்சம் கோர கடல் மார்க்கமாக வந்தவர்களில் சுமார் 1,800 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய ஒதுக்கீட்டை ஐரோப்பிய ஆணையம் வரையறுத்தது.

இதன் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 ஆயிரம் அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்திருந்தது.

இதற்கு, இத்தாலி, பிரித்தானிய, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஜேர்மனி நாடும் இந்த ஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என ஐரோப்பிய ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் ஒதுக்கீட்டின் படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 11,849 அகதிகளுக்கு குடியேற்ற அனுமதியை ஜேர்மனி அரசு வழங்க வேண்டும்.

அதாவது, 60 ஆயிரம் அகதிகளில் சுமார் 20 சதவிகிதத்தினரை ஜேர்மனி அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய அரசு வலியுறுத்தியுள்ளது.

ஆனால், ஜேர்மனியில் அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி வழங்குவது தொடர்பாக ஏற்கனவே எண்ணற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது ஐரோப்பிய ஆணையம் ‘சமநிலை’ இல்லாத ஒதுக்கீட்டை வரையறுத்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளது.

எனவே அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி வழங்குவது தொடர்பான ஒதுக்கீட்டில் உடனடி திருத்தம் செய்ய வேண்டும் என ஜேர்மனி அரசு ஐரோப்பிய ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

-http://world.lankasri.com