தமிழ் இளைஞர்கள் மீண்டும் எழுச்சியடைவதை தடுப்பதற்கே போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன -வடக்கு முதல்வர்

vikneswaran_4ஆயுதம் ஏந்தி அரசாங்கத்தை ஆட்டிப்படைத்த எமது தமிழ் இளைஞர்களை உலக நாடுகளின் உதவியுடன் மகிந்த அரசாங்கம் அழித்தது. இவ்வாறான இளைஞர் படை மீண்டும் எழக்கூடாது என்பதற்காகவே எமது இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதன் பின்னணியில் பெரும் அரசியல் சதி இருப்பதாக கூறிய அவர் எமது இளைஞர்கள் இந்தப் போதைப் பொருட்களில் இருந்து தப்பவேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்.இந்துக் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது இளைஞர், யுவதிகள் விளையாட்டுக்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்டால் தான் பலவித சமூகச் சீரழிவு செயல்களில் இருந்து தம்மை தப்ப வைத்துக் கொள்ளலாம். விளையாட்டுக்கள் எங்கள் உடல்கள் பற்றி எமது திறன்கள் பற்றி சிந்திக்க வைக்கும் தன்மை வாய்ந்தன.

எம்மை குறிக்கோள் நோக்கி இயக்கும். யார் யாரோ வேண்டும் என்றே திட்டமிட்டு போதைப்பொருள் பாவனையைக் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் விநியோகித்து வருகின்றார்கள். சிறு சிறு கடைகளில் எல்லாம் சிறிய பொதிகளில் பல்வேறு பெயர்களில் அவற்றை விநியோகிப்பதாக எனக்கு செய்தி கிடைத்துள்ளது.

புங்குடுதீவில் அண்மையில் இடம்பெற்ற வன்புணர்விலும் கொலையிலும் ஈடுபட்டவர்கள் போதைப் பொருட் பாவிப்புக்கு அடிமைப்பட்டிருந்ததாலேயே மிருகத்தனமாக நடந்து கொண்டதாகப் பேசப்பட்டு வருகின்றது. அரசியல் ரீதியாக ஏன் இந்தப் போதைப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றீர்கள்? அதன் பின்னணியில் ஒரு முக்கியமான காரணம் உண்டு என்பது எனது கருத்து.

ஒரு காலத்தில் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசாங்கங்களையே ஆட்டிப் படைத்து வந்துள்ளனர். வெளிநாட்டு உதவியுடன் பெருத்த செலவுடன்தான் அவர்களை அப்போதிருந்த அரசாங்கத்தால் அழிக்க முடிந்தது. இனியும் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேரக்கூடாது, ஒருமித்துச் செயலாற்றக்கூடாது, கல்வியில் சிறந்து விளங்கக்கூடாது, சுதந்திர எண்ணங்கள் அவர்கள் மனதில் எழக்கூடாது, விடுதலை வெறி அவர்களுள் கொழுந்து விட்டு எழக்கூடாது, அவர்களை நடை பிணங்கள் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் சில அதிகாரபீட அலுவலர்களிடமும் அரசியல்வாத அமைச்சர்களிடமும் எழுந்தது.

வடக்கு, கிழக்கு மாகாண இளைஞர்கள் பலரை அழித்தொழித்து விட்டோம். ஆனால், மீண்டும் அவர்கள் எழமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முகமாகவே போதைப்பொருட்களைத் திட்டமிட்டு அறிமுகம் செய்ய முன்வந்தார்கள் என்பது எனது கருத்து.

எமது இளைஞர்கள் இடையே போதைப் பொருட்களை அறிமுகம் செய்யப் பாரிய ஓர் அரசியல் காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை எங்கள் மாணவ உலகம் அறிந்து கொள்ள வேண்டும். விநியோகம் செய்பவர்களை எமக்குக் காட்டிக் கொடுக்க மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இந்தச் சதியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும்.

சில அமைச்சர்கள், உயர் பதவிகளில் இருந்தவர்கள், சில காலத்துக்கு முன் அதிகாரத்தில் இருந்த பலர் கூட அண்மைக்காலம் வரையில் போதைப்பொருள் விநியோகத் தொழிலில் மறைமுகமாக ஈடுபட்டிருந்தார்கள் என்று இன்றைய அரசாங்கத்தின் ஆராய்வின் போது தெரியவந்துள்ளது.

செல்வாக்கு மிகுந்தவர்களின் உந்துதலின் பேரில் இந்தப் போதைப்பொருள் விநியோக வியாபாரம் வடமாகாணத்தில் நடந்து வந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம். பணம் புரட்டுவதே அவர்கள் குறிக்கோள். இப்பேர்ப்பட்டவர்களுக்கு பணத்துக்கு மேலாக எதுவுமே முக்கியமில்லை.

எனவே பொருளாதார காரணங்களுக்காகவும் போதைப்பொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது. அதனால் சீரழிவது எமது மாணவ இளம் சந்ததியினர். நன்மை அடைவது பெரும் பணம் படைத்தவர்களும், இடைத்தரகர்களும், மாணவ முகவர்களும். போதைப் பொருள் பாவனைக்குக் காசு பணம் வேண்டும். அதற்கு அடிமையானதும் அதன் கோரப் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது. ஆகவே பாவிப்பதற்குப் பணம் வேண்டும்.

இதன் காரணத்தினால் அவர்கள் விநியோகத்தர்களாக மாறுகின்றார்கள். போதைப் பொருட்களை மற்றவர்களுக்கு விற்று தாமும் போதையில் மயங்கி நிற்க துணிகின்றார்கள். இதனால்தான் முதலில் அறிமுகம் செய்தவர்களையும், விநியோகத்தர்களையும் நாம் அடையாளம் காண முடியாது போகின்றது.

புலனுணர்வின் நிமித்தம் இதற்குள் மாட்டிக் கொண்டவர்கள் தான் ஈற்றில் சட்டத்தின் பிடிக்குள்ளும் கைது செய்யப்பட்டு கையேற்கப்படுகின்றார்கள். வழக்குகளின் கேட்பின் போது எனக்குத் தெரியவந்த விடயங்கள் இவை. விரைவில் மத்திய அரசாங்கத்துடனும் சேர்ந்து போதைப்பொருள் பாவிப்பை அழிக்க போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் குணமாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட நாமுள்ளோம். மாணவ மாணவியரின் பூரண ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.

-http://www.sankathi24.com

TAGS: