சவூதி அரேபியா எல்லைப் பகுதிகள் மீது, யேமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேயின் ஆதரவாளர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் ஏராளமானோர் பலியாகினர்.
இதுதொடர்பாக சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சவூதி அரேபிய எல்லைப் பகுதிகளான ஜாசான், நஜ்ரான் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு நிலைகள் மீது யேமன் பகுதியில் இருந்து சனிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில், சவூதி அரேபிய நாட்டினர் 4 பேரும், யேமன் நாட்டினர் ஏராளமானோரும் பலியாகினர். யேமன் முன்னாள் அதிபர் சலே ஆதரவு குடியரசுக் காவல் படையினரும், ஹூதி கிளர்ச்சிப் படையினரும் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணையை சுட்டு வீழ்த்தியது சவூதி அரேபியா: இதனிடையே, யேமன் நாட்டில் இருந்து ஹூதி கிளர்ச்சிப் படையினர் மற்றும் அதன் ஆதரவாளர்களால் ஏவப்பட்ட “ஸ்கட்’ ரக ஏவுகணையை சுட்டு வீழ்த்தி விட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “யேமன் நாட்டில் இருந்து காமிஸ் முஷாஹித் நகரின் தென்மேற்கு பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஸ்கட் ரக ஏவுகணை, 2 ஏவுகணைகள் மூலம் அதிகாலை 2.45 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கவில்லை. அதேசமயம், மேயனில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்தியத் தாக்குதலில், “ஸ்கட்’ ஏவுகணையை செலுத்த பயன்படுத்தப்படும் லாஞ்சர் சேதமடைந்ததாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பின்னணி: ஈரான் ஆதரவு ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சிப் படையினர், யேமன் தலைநகர் சானா மீது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீர் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். அங்கிருந்த அமைச்சகக் கட்டடங்கள், முக்கியப் பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தன்வசப்படுத்தியதை அடுத்து, யேமனில் இருந்து வெளியேறிய அந்நாட்டு அதிபர் அபேத் ரப்போ மன்சூர் ஹாடி, சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, ஹூதி கிளர்ச்சிப் படையினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை குறிவைத்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் கடந்த மார்ச் மாதம் முதல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை அப்பாவி மக்கள் 1,000 பேர் பலியாகியுள்ளதாகவும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
-http://www.dinamani.com
சவுதி தாக்கினால் 1000 அப்பாவி மக்கள் சாவு,இதே அமெரிக்கா தாக்கினால் 1000 தீவிர வாதிகள் சாவு லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்வு என்று மீடியாக்கள் செய்தி வெளியிடும்.நல்ல தொழில் தர்மம்.