சுவிஸ் இந்து மத கோவிலில் தமிழ் பெண் பூசாரிகள்: எதிர்ப்பா? ஆதரவா?

women_priest_001சுவிட்சர்லாந்தில் உள்ள இந்து மத கோவிலில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருவதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது.

சுவிஸின் பெர்ன் (Bern) மண்டலத்தில் சைவநெறி கூடம் என்ற மிகப் பிரமாண்டமான சிவன் கோவில் அமைந்துள்ளது.

உலக நாடுகளில் உள்ள இந்த மத கோவில்களில் ஒரு சில கோவில்களில் மட்டும் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு, பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெர்ன் மண்டலத்தில் உள்ள சிவன் கோவிலும் ஒன்று என்பது மிகச்சிறப்பாகும்.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்கள் பூசாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சுவிஸ் தமிழ் சமுதாயத்தினரில் ஒரு பாதி மக்கள் ஆதரவு தெரிவித்தாலும், மறு பாதியினர் அதற்கு தற்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையை சேர்ந்த மாலா ஜெயகுமார் என்பவர் உள்பட 4 தமிழ் பெண்கள் இந்த கோவிலில் பூசாரிகளாக செயல்பட்டுவருகின்றனர்.

சிவ பூஜை செய்வதற்காக இந்த 4 பெண்களுக்கும் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவற்றில் அவர்கள் நன்கு தேர்ந்த பிறகே பூசாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுவிஸில் உள்ள இந்த சிவன் கோவிலில் பெண் பூசாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?

இவ்வாறான கேள்விக்கு இந்த கோவிலின் தலைமை பூசாரியான தர்மலிங்கம் சசிகுமார் பதிலளிக்கிறார்.

சிவன் கோவிலுக்கு வரும் பிற மதத்தினர்களிடம் இங்குள்ள பெண்கள் எளிதில் உரையாட முடிகிறது. அவர்கள் இந்து மதம், தமிழ் கடவுள்கள் தொடர்பாக எழுப்பும் சந்தேகங்களை பெண்கள் மிக தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கம் அளிப்பதால், ‘பெண்களையே ஏன் பூசாரிகளாக நியமிக்க கூடாது?’ என்ற கேள்வி எழும்பியதாக தர்மலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இந்த கோவிலுக்கு வரும் பிற மதத்தினர் ‘பெண்களை இந்து கோவில்களில் பூஜை செய்ய ஏன் அனுமதிப்பதில்லை’ என கேள்வி கேட்டனர். இந்த கேள்வி தான் தன்னை மிகவும் சிந்திக்க தூண்டியது.

இதனை தொடர்ந்து, இந்தியா, நேபாள நாடுகளுக்கு யாத்திரை சென்றபோது அங்குள்ள மதகுருமார்களை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்து ஆலோசனை பெற்றேன்.

இதில், தமிழ் கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகளில் ‘பெண்களை பூசாரிகளாக நியமிக்க கூடாது’ என்று எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை.

இதனை தொடர்ந்து, இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு குருமார், இங்குள்ள 4 பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கு சிறந்த முறையில் பூஜை மற்றும் இந்து மத சடங்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பூசாரிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் தான் மேலே கூறிய மாலா ஜெயகுமார். இலங்கை போரிலிருந்து மீண்டு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் சுவிஸில் குடியேறியவர்.

இது குறித்து அவர் கூறும்போது, சுவிஸிற்கு புதிதாக வந்தபோது தனியாக விட்டது போல் உணர்ந்தேன். இங்கு வழிபாட்டிற்கும் சரியான கோவில் இல்லாமல் இருந்ததும் ஒரு பிரச்சனையாக இருந்தது என்றார்.

பின்னர், 10 வருடங்களுக்கு முன்னர் இந்த சிவன் கோவிலை சுத்தப்படுத்தும் ஒரு ஊழியராக சேவையை தொடங்கி தற்போது பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலில் பூசாரியாக உள்ளவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன என கூறிய தர்மலிங்கம் அது குறித்து விளக்குகிறார்.

பெண் ஒருவர் பூசாரியாக நியமிக்கப்பட்டதுடன், அவர் சுத்தமாகவும் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

மேலும், இங்கு வரும் பக்தர்கள் எந்த மதம் அல்லது சாதியாக இருந்தாலும் அவர்களை சமமாக நடத்த வேண்டும்.

இவர்களின் சேவைகளுக்கு மாதாந்திர ஊதியமோ அல்லது இழப்பீடோ வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக, அவர்களின் சேவையின் அடையாளமாக ஒரு பிராங்கு மட்டும் வழங்கப்படுகிறது.

மேலும், கோவிலில் பூஜைகள் செய்வது மட்டுமில்லாமல், இங்கு வரும் தமிழ் மக்களின் நிறை குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் வழங்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளில் ஒன்றாகும்.

இது குறித்து பேசிய மாலா ஜெயகுமார், பல்வேறு பிரச்சனைகளால் வெளிநாட்டிற்கு வரும் தமிழ் மக்களுக்கு பல சந்தேகங்களும் இன்னல்களும் ஏற்படும். அவற்றை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவது தங்களின் சேவை என கூறியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்று இருந்தாலும், இந்த கோவிலில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன.

இது குறித்து பேசிய தலைமை பூசாரி தர்மலிங்கம், இந்து மத வேதத்தின் படி, இந்து மத கோவில்களில் ஆண்கள் தான் பூசாரிகளாக இருக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் பெரும்பாலும் முதிய வயதில் உள்ள பக்தர்கள் தான். அவர்களுடைய நாடுகளில் பின்பற்றுவது போல சுவிஸில் இந்த மத கோவிலில் ஆண்கள் தான் பூசாரிகளாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

இது குறித்து பேசிய கண்ண நாதன் ராஜ்கண்ணா என்பவர், சுவிஸிற்கு வந்த முதல் தலைமுறையினர் மற்றும் முதிய வயதை அடைந்துள்ள தமிழர்கள் அனைவரும் பழமை விரும்பிகள். அவர்களுக்கு இதுபோன்ற புரட்சிகரமான சீர்த்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இருப்பினும், இது ஒரு முற்போக்கு சிந்தனை மற்றும் பகுத்தறிவு திட்டமாக இருப்பதால் காலப்போக்கில் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.

மேலும், தற்போதைய 4 பெண் பூசாரிகளும் திறம்பட, மதத்திற்கு கெட்டப்பெயர் ஏற்படாதவாறு பூஜைகள் நடத்தி வருவது, இந்த திட்டத்தை எதிர்த்தவர்களையும் மனம் மாற்றி வருவதாக கண்ணநாதன் தெரிவித்துள்ளார்.

சுவிஸில் தற்போது உள்ள சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் மற்றும் இரண்டாம் தலைமுறையினர் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், மத நம்பிக்கைகளில் மூழ்கியுள்ள இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த மாற்றத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.

-http://www.coolswiss.com