எங்கள் எல்லையில் ஆயுதங்களை குவித்தால் பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா

ru_usicon_001தங்கள் நாட்டின் எல்லை அருகே அமெரிக்கா ஆயுதங்களை குவித்தால் தக்க பதிலடி தருவோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய எல்லையின் அருகில் உள்ள நேட்டோ நாடுகளில் டேங்கர்கள் மற்றும் பாரிய அளவில் ஆயுதங்களை குவிக்கவேண்டும் என்று ரஷ்யாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காலத்தில் இருந்தே அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் உக்ரேன் விவகாரத்துக்கு பிறகு ரஷ்யாவை ஒட்டியுள்ள ஐரோப்பாவின் கிழக்கு பகுதிகளில் தங்களது ஆயுதங்களை சேமித்து வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

போலாந்து மற்றும் பால்டிக் கடலை ஒட்டியுள்ள நாடுகள் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும் மற்ற நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ரஷ்ய மற்றும் அமெரிக்க படைகளுக்கு நடுவில் மாட்டிகொள்வோமோ என்று அவைகள் அஞ்சுகின்றன.

ஆனால் பால்டிக் நாடுகளான லித்துவானியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவற்றில் தலா 150 ராணுவ வீரர்களையும் போலாந்து, பல்கேரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் 750 ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை சேமிக்க முடிவு செய்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை தலைமை அதிகார் யூரி யாகுபொவ் கூறுகையில், ரஷ்யாவை சுற்றியுள்ள எல்லைகளில் ஆயுதங்களை குவிக்க அமெரிக்கா முடிவு செய்தால் அது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் மோசமான ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இருக்கும்.

ரஷ்யாவுக்கு எங்கும் புதிய படைத்தளம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்கும் எண்ணம் இல்லை.

அதே நேரத்தில் எங்களின் மேற்கத்திய எல்லைகளை பலப்படுத்துவதில் எங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com