பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தொடரும் பாகிஸ்தானின் சில பகுதிகள்: அமெரிக்கா

pakistan terrorஆப்கானிஸ்தானையொட்டிய பாகிஸ்தான் பகுதிகள், பயங்கரவாதிகளின் புகலிடமாக தொடர்ந்து விளங்கி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகள், கைபர் பாக்துன்க்வா, தென்மேற்கு பலூசிஸ்தான் ஆகிய பகுதிகள் பயங்கரவாதிகளின் புகலிடமாக தொடர்ந்து இருந்து வருகின்றன.

இந்தப் பகுதிகளில் இருந்து கொண்டு, அவர்கள் பாகிஸ்தானிலும், உலக அளவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்துவதற்கான சதித் திட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் பகுதிகளில் கிடைக்கும் பாதுகாப்பைப் பயன்படுத்தி, அல்-காய்தா, ஹக்கானி அமைப்பு, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், லஷ்கர்-இ-ஜாங்வி, ஆப்கன் தலிபான் ஆகிய அமைப்புகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், பாகிஸ்தான் தலிபான்களின் மறைவிடங்களில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

எனினும், பிற அமைப்புகள் அந்தப் பகுதிகளில் சுதந்திரமாக செயல்படுகின்றன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“லஷ்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய பாகிஸ்தான்’

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்திய லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை சனிக்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் தலிபான்களுக்கு எதிராக, அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், லஷ்கர்-இ-தொய்பா போன்ற இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க அந்த நாடு தவறிவிட்டது.

அந்த அமைப்பு இன்னமும் பாகிஸ்தானில் பயிற்சியளிக்கவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும், தங்களது கொள்கைகளைப் பரப்பவும் அந்த நாட்டு அரசு அனுமதி அளித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

-http://www.dinamani.com