முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கார் குண்டு வெடித்தது. அதைத்தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை எதிர்த்த பாதுகாப்புபடையினர், துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய மேற்கொண்ட முயற்சியை தாங்கள் முறியடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்துக்கு எதிரே கட்டிடவேலை நடந்துகொண்டிருக்கும் இடத்தை ஆக்ரமித்திருக்கிறார்கள். இருதரப்பாருக்கும் இடையில் சண்டைகள் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றக்கட்டிடம் புகை சூழ்ந்து காணப்படுவதையும் அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர கதியில் வெளியேற்றப்படுவதையும் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன.
ரொக்கெட் தாக்குதல்கள் மற்றும் கையெறி குண்டுத்தாக்குதல்கள் விட்டுவிட்டு நடந்தபடியே இருக்கின்றன.
இந்த தாக்குதலை தாங்கள் நடத்திவருவதாக தாலிபன் அமைப்பு உரிமை கோரியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவுக்கு ஒப்புதல் அளிக்கும் நாடாளுமன்ற வாக்கெடுப்புடன் தொடர்புடையதாக தமது இந்த தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியதாக தாலிபன் அமைப்பு கூறியிருக்கிறது.
இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்திருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் ஆரம்பித்தது முதல் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். மீட்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் 9 தடவை குண்டு வெடித்த சத்தம் கேட்டது. முதல் குண்டு பாராளுமன்றத்துக்கு வெளியே காரில் இருந்து வெடித்தது. அதை தொடர்ந்து பல இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இந்த தாக்குதலில் எம்.பி.க்கள் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிவித்தார்.
-www.tamilwin.com