வருகிறது ‘செயற்கை ரத்தம்’: மருத்துவ துறையில் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்

artificial_blood_001மனிதர்கள் உயிர் வாழ அவசியமான ரத்தத்தின் தேவை சர்வதேச அளவில் அதிகரித்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு ரத்தத்தை பரிமாற்றம் செய்யும் தேவையும் அதிகரித்து வருகிறது.

உலகளவில் ஆண்டுக்கு 12 மில்லியன் நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தின் இருப்பு என்பது 8 மில்லியன் நபர்களுக்கு மட்டுமே தேவையானதாக இருந்து வருகிறது.

இந்த பற்றாக்குறையை போக்க பிரித்தானியாவில் உள்ள National Health Service, ‘synthetic blood’ என்று சொல்லக்கூடிய செயற்கை ரத்தத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது.

மனிதன் உயிர் வாழ ரத்தம் மிக அவசியமானது என்ற உண்மையை 1940ம் ஆண்டுகளிலேயே மருத்துவர்கள் உணர்ந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ரத்தத்தை செயற்கையாக தயாரிக்கும் ஆய்வுகள் மற்றும் அதற்கான பணிகள் அதே ஆண்டிலேயே தொடங்கியுள்ளது.

பல ஆண்டுகள் முயற்சிக்கு பின்னர், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னிய மருத்துவர்கள் முதன் முதலாக ‘செயற்கையான ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதனை செய்தனர்.

ஆனால், உடலில் ஏற்றப்பட்ட இந்த செயற்கை ரத்தம் சுமார் 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் ரத்தம் இயற்கையாகவே செயல்படும் வகையில் ரத்தம் தயாரிக்கப்பட வேண்டும் என்பதால், நவீன முறைகளில் செயற்கை ரத்தத்தை தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்றது.

இந்நிலையில், பிரித்தானியாவின் National Health Service செயற்கை ரத்தத்தை தயாரிக்கும் பணியை பல வருடங்களுக்கு முன்னர் தொடங்கி இருந்தாலும், அதனை வெற்றிகரமாக பரிசோதிக்கும் பணி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் என தற்போது தெரிவித்துள்ளனர்.

மனிதனின் உயிர் ஆதாரமான ஸ்டெம் செல் எனப்படும் பரம்பரை உயிர் அணுக்களை, குழந்தை பிறந்ததும் அதன் தொப்புள் கொடியில் உள்ள ரத்தத்திலிருந்து சேகரிக்கப்படுகிறது.

இந்த ஸ்டெம் செல்களை பயன்படுத்தி புதிதாக ரத்த செல்களை உருவாக்க முடியும். இந்த ரத்த செல்களையும், சேகரிக்கப்பட்ட ரத்தத்தையும் மனித உடம்பில் செலுத்தி அது எதிர்மறை விளைவுகள் இல்லாமல் செயல்படுகிறதா என பரிசோதனை செய்யப்படும்.

இந்த செயற்கை ரத்தம் குறித்து பேசிய மருத்துவரான Nick Watkins, இந்த செயற்கை ரத்தம் பரிமாற்றமானது தொற்று நோயை ஏற்படுத்தாது. ரத்த பரிமாற்றம் செய்யும்போது எய்ட்ஸ் நோய் பரவும் அபாயத்தையும் இந்த செயற்கை ரத்தம் முற்றிலுமாக நீக்கிவிடும் என்றார்.

இந்த செயற்கை ரத்தமானது ரத்தத்தின் இருப்பை அதிகரிக்க மட்டுமல்லாமல், அரிதான ரத்த வகையை சேர்ந்த பலருக்கு ரத்தம் வழங்கும் வகையில் செயற்கை ரத்தம் உதவியாக இருக்கும் என Nick Watkins தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com