போர் நடைபெற்று வரும் யேமனில் கடும் பஞ்சம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் எச்சரித்திருக்கிறார்.
உள்நாட்டு சக்திகள் இடையேயான போரினாலும், சவூதி கூட்டுப் படையினரின் தாக்குதலாலும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் யேமனில் 3.10 கோடி மக்களுக்கு மிக அவசரமாக உணவு, மருந்துகள் உள்ளிட் உதவிப் பொருள்கள் தேவைப்படுவதாக அந்நாட்டுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் இஸ்மாயில் சேக் அகமது கூறினார்.
யேமன் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அந்நாட்டின் நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை இஸ்மாயில் சேக் அகமது அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாட்டு அங்கத்தினர்கள், இஸ்மாயில் சேக் அகமது தவிர, வெளி நபர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
அந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் யேமனுக்கான சிறப்புத் இஸ்மாயில் கூறியதாவது:
உண்மையான போர் நிறுத்தம் ஏற்படும் வரை யேமன் நாட்டு மக்களின் அவதி தொடரும். அவர்களின் தற்போதைய நிலைக்கு சண்டையில் ஈடுபட்டு வரும் அனைத்துத் தரப்பினரும் காரணம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டில் 70 லட்சம் பேருக்கு அவசர உதவி தேவைப்பட்டது. அங்கு அரசியல் குழப்பம் தொடங்குவதற்கு முன்னர், இருந்த நிலை அது.
உள்நாட்டு சண்டை தொடங்கி, தற்போது வெளிநாட்டுப் படைகளும் வான் வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் மருந்து, உணவு உள்ளிட்ட உதவிப் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது.
இரண்டு கோடிப் பேருக்கு குடிநீர் கூட கிடைப்பதில்லை. 10 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி வாழ இடமின்றித் தவிக்கின்றனர்.
3.10 கோடி மக்களுக்கு அவசர உதவிப் பொருள்கள் தேவைப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால் கொடும் பஞ்சம் அந்த நாட்டைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றார் அவர்.
யேமனின் துறைமுகங்களை நெருங்க முடியாத வகையில் அவை முற்றுகையிடப்பட்டுள்ளன.
பல நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, சர்வதேச உதவி அமைப்புகள் சார்பில் அனுப்பப்பட்ட உணவு, ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட ஆயிரம் டன் உதவிப் பொருள்கள் தாங்கிச் சென்ற கப்பல், ஹுதைதா துறைமுகத்தை புதன்கிழமை சென்றடைந்தது.
யேமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் போர் நிகழ்ந்து வருகிறது.
முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு ஆதரவாக உள்ள வீரர்கள், கிளர்ச்சியாளர்கள் ஆகியோர், அரசுப் படைகளுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர்.
தலைநகர் சனாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, நாட்டின் அதிபர் மன்சூர் ஹாதி, சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.
இந்த நிலையில், சவூதி தலைமையில் 10 அரபு நாடுகளின் கூட்டுப் படையினர் யேமனில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.
அந்நாட்டில் உள்நாட்டுச் சண்டை தொடங்கிய பின்னர், பெண்கள்,குழந்தைகள் உள்பட 2,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சுமார் 8,000 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
ஐ.நா. முன்னிலையில் ஜெனீவாவில் கடந்த வாரம் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, யேமன் நிலை குறித்த அறிக்கையை ஐ.நா.வின் சிறப்புத் தூதர், பாதுகாப்புக் கவுன்சிலில் அளித்தார்.
-http://www.dinamani.com