பிரான்ஸின் மூன்று அதிபர்களை அமெரிக்கா ரகசியமாக உளவுபார்த்தது என்கிற (விக்கிலீக்ஸ்) செய்தியை அடுத்து பிரான்ஸ் அரசாங்கம் அமெரிக்க செயல் ஏற்கத்தக்கதல்ல என்று சாடியிருக்கிறது. கூட்டாளிகளை உளவுபார்ப்பதை நினைத்துப்பார்க்கவே முடியாது என்றும் பிரான்ஸ் விமர்சனம் செய்திருக்கிறது. இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆவணங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஒல்லாந்த் கூட்டியிருக்கும் பிரான்ஸின் பாதுகாப்பு கவுன்ஸின் அவசர கூட்டத்திற்கு முன்னதாக பிரான்ஸ் அரசின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம், ஃபிரான்சுவா ஒல்லாந்தையும் அவருக்கு முந்தைய இரண்டு பிரெஞ்சு அதிபர்களையும் 2006 முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உளவுபார்த்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆவணங்கள் குறிப்புணர்த்துகின்றன. தாங்கள் தற்போது யாரையும் குறிவைக்கவில்லை என்றும், ஒல்லாந்தின் தகவல் பரிமாற்றத்தையும் தாங்கள் குறிவைக்கவில்லை என்றும் அமெரிக்கா விளக்கமளித்திருக்கிறது. ஆனால் தனது கடந்தகால செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
ஜெர்மன், பிரேசில் மற்றும் மெக்ஸிகத் தலைவர்கள் வேவுபார்க்கப்பட்டது தொடர்பில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட கடந்தகால ஆவணங்களை வைத்துப்பார்க்கும்போது அதன் விக்கிலீக்ஸின் ஆவணங்கள் ஏற்கத்தக்கவையாக இருக்கலாம் என்று தோன்றுவதாக வாஷிங்க்டனில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
-http://www.athirvu.com