தென்மலை ரப்பர் எஸ்டேட்டில் அடிமைகளாய் நடத்தப்படும் இலங்கை அகதிகள் புற்று நோயால் அவதிப்படும் அவலம் தற்போது வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலையில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மத்திய அரசுக்கு சொந்தமான ஆர்.பி.எல். எனப்படும் ரப்பர் எஸ்டேட் உள்ளது.
இங்குள்ள ரப்பர் தொழிற்சாலையில் இருந்து பால் எடுக்கப்பட்டு மும்பை, புனே போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இங்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அகதிகள் 650 குடும்பங்களாக வந்து தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
தற்போது இந்த குடும்பங்கள் பெருகி 1,500 தொழிலாளர்கள்வரை வேலை செய்து வருகிறார்கள்.
இந்த தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.300 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தில் தான் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தை நடத்துகிறார்கள்.
ஒரு வீட்டிற்கு 2 பேர் மட்டும் தான் வேலை செய்ய முடியும். இது இந்த நிறுவன விதி என்பதால், இந்த சம்பளம் இவர்களது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.
இலங்கை அகதிகள் இதுபற்றி கூறுகையில், எங்களது தேவைகளுக்காக யாரும் போராட முடியாத சூழ்நிலையில் உள்ளதால் நாங்கள் அடிமை போல் நடத்தப்படுகிறோம் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள தொழிலாளர்களுக்கு புற்று நோய் அதிகமாக வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர்களில் சுமார் 35 சதவீதம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு இறந்தவர்களில் பெரும்பாலானோர் புற்று நோயால் தான் இறந்துள்ளனர்.
இந்த நோய் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் தான் வருகிறது என்று சிலர் கூறும் நிலையில், வேறு சிலர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் வருகிறது என்று கூறுகின்றனர்.
ரப்பர் மரத்தில் இருந்து அதிக பால் எடுப்பதற்காக உபயோகிக்கப்படும் எத்திப்போன் என்ற விஷத்தன்மை கொண்ட ரசாயன மருந்தால் கூட இந்த நோய் வரலாம் என்று கூறுகின்றனர்.
அந்த பகுதியில் அடிக்கடி புற்று நோய்க்காக மருத்துவ முகாம்கள் போடப்பட்டாலும், நோய் உருவாவதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கூறுகையில், இதுதொடர்பாக நாங்கள் கணக்கெடுத்ததில் இங்குள்ள தொழிலாளர்களில் 35 சதவீதம் பேருக்கு புற்று நோய் இருப்பதாக தெரிய வந்துள்ளளது.
பலர் தங்களுக்கு இந்த நோய் உள்ளதை வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்டு ரகசியமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலை நீடித்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இங்குள்ள எல்லோருக்கும் இந்த நோய் வந்து விடும் என்று அச்சமாக உள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை நியமனம் செய்து ஆய்வு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாக்கு, புகையிலை போன்றவை உபயோகிப்பதால் புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றாலும் இந்த பழக்கம் இல்லாத குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு புற்று நோய் வருவது புரியாத புதிராக உள்ளது.
மத்திய மாநில அரசுகள் இந்த நோயை ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அறுவை சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-http://www.newindianews.com