”எனக்கு தஞ்சம் அளியுங்கள்”: பிரான்ஸ் அதிபருக்கு விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசான்ஜே பகிரங்க கடிதம்

julian_assange_001அமெரிக்காவின் ரகசிய தகவல்களை வெளியிட்டது உள்ளிட்ட பல குற்றங்களால் அமெரிக்க அரசாங்கத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள விக்கி லீக்ஸ் நிறுவனரான ஜுலியன் அசான்ஜே பிரான்ஸ் அரசாங்கத்திடம் தஞ்சம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளை அமெரிக்க உளவு நிறுவனம் ரகசியமாக கண்காணித்து வருவதுடன், ஐரோப்பிய தலைவர்களின் உரையாடல்களை அமெரிக்கா ஒட்டு கேட்டதாக விக்கி லீக்ஸ் மூலம் ஜுலியன் அசான்ஜே தகவல்களை வெளியிட்டார்.

சர்வதேச அளவில் புயலை கிளப்பிய இந்த விவகாரத்தை தொடர்ந்து, அமெரிக்க நாட்டின் மனித உரிமைகளை மீறியது, ரகசிய தகவல்களை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அவரை கைது செய்யுமாறு அமெரிக்க உத்தரவிட்டுருந்தது.

கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக தற்போது லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரக அலுவலகத்தில் ஜுலியன் அசான்ஜே தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் உயர் அதிகாரிகளை அமெரிக்காவின் NSA உளவு நிறுவனம் வேவு பார்த்ததாக ஜுலியன் அசான்ஜே அண்மையில் பரபரப்பான தகவலை வெளியிட்டுருந்தார்.

இந்த தகவலை தொடர்ந்து, தன்னுடைய நாட்டிற்கு ஆதரவாக தகவல்களை அளித்த ஜுலியன் அசான்ஜேவிற்கு தஞ்சம் அளிக்கலாம் என பிரான்ஸ் அரசு தீர்மானித்திருந்ததாக ஊடங்கள் தெரிவித்திருந்தன.

இதனை தொடர்ந்து, தற்போது ‘பிரான்ஸ் நாட்டில் தனக்கு அரசியல் ரீதியான புகலிடம் அளியுங்கள்’ என பிரான்ஸ் அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டேவிற்கு ஜுலியன் அசான்ஜே கடிதம் அனுப்பியுள்ளதாக Le Monde என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், ஜுலியன் அசான்ஜே பிரான்ஸ் அரசிடம் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, அவரது புகலிட கோரிக்கையை பிரான்ஸ் அரசு நிராகரித்து விட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com