நைஜீரியாவில் பயங்கரம்: சிறுவர்கள், பெண்கள் உள்பட 150 பேரை சரமாரியாக சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்

bokokaram_attack_001நைஜீரியா நாட்டில் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உள்பட சுமார் 150 நபர்களை போகோஹாரம் தீவிரவாதிகள் சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டின் Borno மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் ரம்ஜான் நோன்பு முடிந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மசூதிகளுக்குள் திடீரென புகுந்த சுமார் 50 தீவிரவாதிகள், தொழுகையில் இருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.

பின்னர், மசூதிகளை விட்டு வெளியே வந்த தீவிரவாதிகள் கிராமங்களில் இருந்த வீடுகளுக்குள் புகுந்து சிறுவர்கள், பெண்களை வெளியே இழுத்து வந்து வீதியில் வைத்து கொன்று குவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சுமார் 150 நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த புதன் கிழமை மாலை வேளையில் நிகழ்ந்த இந்த தாக்குதலில், Kukawa என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டும் சுமார் 97 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் பெண்களை தீவிரவாதிகள் சுடவில்லை என கூறப்பட்டாலும், மசூதிகளில் சரமாரியாக சுட்டதில் பெண்களும் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் நிகழ்ந்த பின்னர், எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், போகோ ஹாரம் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவில் கடந்த மே மாதம் Muhammadu Buhari அதிபராக பதவி ஏற்றதற்கு பின்னர் நிகழ்ந்துள்ள பயங்கரமான தாக்குதல் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச மன்னிப்பு சபையான அம்னிஸ்ட்டி வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் சுமார் 17 ஆயிரம் அப்பாவி மக்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

-http://world.lankasri.com