சிரியாவிலிருந்து 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்: ஐ.நா.

syria_womenசிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அங்கிருந்து அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியதாக ஐ.நா. அகதிகள் உரிமை ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

கடந்த 25 ஆண்டுகளில், சண்டை காரணமாக இவ்வளவு அதிக அளவில் வேறு எங்கும் மக்கள் புலம் பெயர்ந்ததில்லை என அந்த அமைப்பு கூறியது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து துருக்கி நாட்டுக்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, சிரியாவில் உள்நாட்டுச் சண்டை தொடங்கியதிலிருந்து, அந்த நாட்டை விட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுதவிர, சண்டை காரணமாக சிரியாவுக்குள்ளேயே 76 லட்சத்துக்கும் மேலானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. அகதிகள் உரிமை ஆணையர் ஆன்டோனியோ குட்டர்ரெஸ் கூறியதாவது:

ஒரு சண்டையில், இவ்வளவு அதிக எண்ணிக்கையில் அகதிகள் புலம் பெயருவது இந்த தலைமுறை கண்டிராதது.
இவ்வளவு அகதிகளுக்கும் உலக நாடுகளின் உதவி தேவை.

அவர்களது வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் மோசமாகி, அவர்கள் தொடர்ந்து வறுமையில் வாடி வருகின்றனர் என்றார் அவர்.

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 30 லட்சமாக இருந்து, பத்தே மாதங்களில் 40 லட்சமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவிலிருந்து வெளியேறிய அகதிகளில் பெரும்பாலானோர் அண்டை நாடான துருக்கியில் தஞ்சமடைகின்றனர்.

அந்த நாட்டில், 18 லட்சம் சிரியா நாட்டவர்கள் அகதிகளாக உள்ளனர்.

உலக நாடுகளில் வேறு எங்கும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் அகதிகள் தங்கவைக்கப்பட்டதில்லை. இவ்வளவு அகதிகளுக்கும் துருக்கி தனது சொந்த நிதியிலிருந்தே உதவிகள் வழங்கி வருகிறது.

-http://www.dinamani.com