மில்லியனை நெருங்கும் ஐ.நாவை நோக்கிய கையெழுத்து வேட்டையில் திருமாவளவன்! தேனிசை செல்லப்பா!

million-signஇலங்கைத்தீவில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் அவர்களது கருத்து, பலரது கவனத்தினை பெற்றுள்ள நிலையில், ஐ.நாவை நோக்கிய கையெழுத்துப் போராட்டம் மில்லியனை நெருங்கி வருகின்றது.

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரி உலக தமிழர் பரப்பெங்கும் முனைப்பு பெற்றுள்ள இக்கையெழுத்துப் போராட்டம் இணையவழி எட்டு லட்சம் மின்னொப்பங்களை கடந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்சி அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து பலரும் ஆர்வத்துடன் பங்கெடுத்து வரும் இக்கையெழுத்து இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஒப்பமிட்டுள்ளதோடு தனது கட்சித் தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் ‘அமைதிக்கான அச்சுறுத்தல்’ தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது’ என்று இக்கையெழுத்து மனுவில் கோரப்படுகின்றது.

விடுதலைப்பாவலர் தேனிசை செல்லப்பா அவர்களும் இக்கையெழுத்து வேட்டையில் தன்னையும் இணைத்துக் கொண்டதோடு உலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org குறித்த இந்த இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக் கொள்ளலாம்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டு வருவதோடு தமிழகத்துக்கு வெளியே பெங்களுரிலும் இது முனைப்பு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: