ஐ.நா. போர் நிறுத்த அறிவிப்பு மீறல் :யேமனில் மீண்டும் சவூதி கூட்டுப் படை தாக்குதல்

யேமனில் அமைதி திரும்புவதற்கு வழிவகுக்கும் ஐ.நா.வின் போர் நிறுத்த அறிவிப்பு மீறப்பட்டது.

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை விமானங்கள் யேமனின் தயீஸ் நகர் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் குண்டு வீச்சு நிகழ்த்தின.

புனித ரமலான் மாத இறுதி வரை, யேமனில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி, இரு தரப்பினரையும் ஐ.நா. அறிவுறுத்தியது.

யேமனின் மிக அவசர மருத்துவத் தேவைகள் உள்ளிட்டவற்றை, சர்வதேச உதவி அமைப்புகள் அளிக்க உதவும் விதத்தில் ஐ.நா. அமைதித் திட்டத்தை முன்வைத்தது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஐ.நா.வின் அறிவிப்பு நடைமுறைக்கு வந்த ஒரு சில மணி நேரங்களிலேயே, சவூதி கூட்டுப் படை விமானங்கள் யேமனின் தென் மேற்கு நகரமான தயீஸில், கிளர்ச்சியாளர்களின் பல்வேறு நிலைகளைக் குறி வைத்து தாக்குதல் நிகழ்த்தின.

தயீஸ் நகரின் பெரும் பகுதி கிளர்ச்சியாளர்களின் வசமுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவர்களுக்கும் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவான படை வீரர்களுக்கும் இடையே சண்டை மூண்டது.

இதையடுத்து, நகரின் பல்வேறு பகுதிகளில் சவூதி கூட்டுப் படையின் போர் விமானங்கள் குண்டு வீச்சு நிகழ்த்தின.

இந்தத் தாக்குதல்களில் கிளர்ச்சியாளர்களின் முகாம் தகர்க்கப்பட்டது. கிளர்ச்சியாளர்களின் வாகனங்களும் தகர்க்கப்பட்டன.

ஐ.நா.வின் அமைதி அறிவிப்பு

மீறப்பட்டதற்கு, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.

சண்டை நிறுத்தத்தைப் பயன்படுத்தி, புதிய பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக ராணுவத்தினர் குற்றம் சாட்டினர். உணவு, குடிநீர், மருந்து, பாதுகாப்பான குடியிருப்பு இல்லாமல் யேமனின் 80 சதவீத மக்கள் அவதியுற்று வருவதாக, ஐ.நா. கூறியுள்ளது.

இதையடுத்து, கிளர்ச்சியாளர்களுக்கும் அதிபருக்கு ஆதரவான ராணுவ வீரர்களுக்கும் இடையேயான சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. கூறியது.

-http://www.dinamani.com