சிக்கன நடவடிக்கை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

greece_refe_001பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிரீஸ், சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து கடனுதவி பெறுவதற்கு ஏதுவான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

கிரீஸுக்குக் கடன் வழங்குவதற்காக, சர்வதேச நிதி அமைப்புகள் விதிக்கும் சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட நிபந்தனைகள் இந்த சீர்திருத்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

அந்த நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான கிரீஸ் நாட்டு மக்கள் வாக்களித்த நிலையில், நாடாளுமன்றம் அந்த நிபந்தனைகள் அடங்கிய பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் பதிவாகின.

8 எம்.பி.க்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனர். வாக்களிப்பை புறக்கணித்த எம்.பி.க்களில் இருவர் ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான அரசின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கம்யூனிஸ்ட், நாஜி கொள்கைகளால் கவரப்பட்ட “கோல்டன் டான்’ ஆகிய கட்சிகளைத் தவிர அனைத்து எதிர்க் கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

வரி உயர்வு, ஓய்வூதியங்களைக் குறைப்பது உள்ளிட்ட சீர்திருத்த அம்சங்கள் அந்தத் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிரீஸýக்கு கடனுதவி அளிக்கும் சர்வதேச நிதி அமைப்புகள் இந்த சீர்திருத்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால், மூன்றாவது முறையாக பொருளாதாரச் சீரழிவிலிருந்து கிரீûஸக் காப்பாற்றுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் கீழ், அடுத்த மூன்று ஆண்டுகளில் 5,350 கோடி யூரோக்கள் (சுமார் ரூ. 3,78,241 கோடி) கடனுதவி கிரீஸ் நாட்டுக்கு வழங்கப்படும்.

-http://www.dinamani.com