தமிழ் வாக்குகள் சிதறுமா? திரளுமா? நிலாந்தன்

sri-lankas-killing-fieldsகடந்தவாரம் தமிழ்த் தரப்புச் செய்திகளில் அதிகம் கவனிப்பைப்பெற்றவை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிதவாத அரசியலில் இறங்கப் போவதாக வெளிவந்த அறிவிப்புக்களே. முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மிதவாத அரசியலில் இறங்குவது என்பது இலங்கைக்குப் புதியதல்ல. அது உலகளாவிய தோற்றப்பாடும் கூட. நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத்போன்ற அனைத்துலக உதாரணங்களை இங்கு காட்டலாம். இச்சிறுதீவில் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஜே.வி.பியானது இப்பொழுது மிதவாத அரசியலில் ஈடுபடுகிறது.

இப்பொழுது இச்சிறுதீவின் ஜனாதிபதியாக இருப்பவர் சில தசாப்தங்களுக்கு முன்பு ஜே.வி.யுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டவர்தான். எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மிதவாத அரசியலுக்குள் இறங்குவது நூதனமான ஒன்றல்ல.

ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்குப் வந்தபின்னரான இலங்கைத்தீவில் அதிகம் ஆபத்துக்குள்ளாகக் கூடிய ஒரு தரப்பாகக் காணப்படுவது முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள்தான்.

இவர்களில் சிறு தொகையினரே நீதிமன்றங்களால் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டவர்களே. அதாவது சட்டப்படி இவர்களின் நிலைமை ஒப்பீட்டளவில் பலமானது அல்ல. இப்படி இலங்கைத் தீவில் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் இருக்கும் தரப்பினர் மிதவாத அரசியலுக்குள் நுழைவது என்பது அண்மைய வாரங்களில் அதிகம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

முதலில் ஒரு சொற்பொருள் விளக்கத்திற்குப் போவோம். “முன்னாள் போராளி” என்ற பதப்பிரயோகம் சரியா? போராளி எனப்படுவது ஒரு பதவி நிலையா? அல்லது தகுதி நிலையா? “முன்னாள் போராளி” என்று அழைத்தால் அவர் இப்பொழுது போராளி இல்லையா? ஆயுதம் ஏந்தியவர் மட்டும்தான் போராளியா? நிச்சயமாக இல்லை. சிறுமை கண்டு பொங்கும் எல்லாருமே போராளிகள்தான். அது ஒரு இரத்ததில் ஊறிய குணம். போராளி என்றென்றும் போராளிதான். அவர் பின்னாளில் தமது இலட்சியங்களில் சறுக்கும்போது அல்லது அல்லது சலிப்புற்று ஓய்வெடுக்கும் போது வேண்டுமானால் அவரை முன்னாள் போராளி என்று அழைக்கலாம். மற்றும்படி ஒரு இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின் தனது போராளித் தகைமையை இழந்துவிடுவார் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எனவே இக்கட்டுரையானது “முன்னாள் போராளிகள்” என்ற வார்த்தையை பிரக்ஞை பூர்வமாகத் தவிர்க்கிறது. பதிலாக “முன்னாள் புலி இயக்க உறுப்பினர்கள்” என்று வேண்டுமானால் அழைக்கலாம். அல்லது அதைவிடப் பொருத்தமான சொற்கள் இருந்தால் கண்டுபிடிக்கலாம்.

இனி கட்டுரையின் அடுத்தடுத்த பகுதிகளுக்குப் போகலாம். முன்னாள் புலி இயக்க உறுப்பினர்கள் தேர்தலில் இறங்குவது குறித்து பிரதானமாக இரண்டு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவது – அவர்கள் தேர்தலில் ஈடுபட்டுத் தோற்றால் அது புலிகள் இயக்கத்தின் கொள்கைக்கு கிடைத்த தோல்வியாகக் கருதப்படுமா?

இரண்டாவது- இவர்கள் யாருடைய கைப்பாவைகளாக இருக்கக் கூடும்? என்ற ஊகங்கள். இவற்றைச் சிறிது விரிவாகக் பார்க்கலாம்.

முதலாவதாக – இவர்கள் சேர்ந்து உருவாக்கும் கட்சி அல்லது இவர்கள் தேர்தலில் பெறும் வெற்றி தோல்வி புலிகள் இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி தோல்வியாகக் கருதப்படுமா? கோட்பாட்டு ரீதியாகச் சிந்தித்தால் இல்லை என்பதே பதிலாக அமையும். அதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

முதலாவது – புலிகள் இயக்கம் அதிகபட்சம் படைத்துறை ஒழுக்கத்தைக் கொண்ட ஒரு இயக்கம். அது ஒரு அரசியல் பிரிவைக் கொண்டிருந்தது. இடையில் சிறிது காலம் ஒரு கட்சியையும் உருவாக்கி வைத்திருந்தது. ஆனாலும் நடைமுறையில் அந்த இயக்கம் தேர்தல் அரசியலில் அதிகம் நம்பிக்கை கொண்ட ஒரு இயக்கமாக என்றைக்குமே இருந்ததில்லை. ஐரிஸ் விடுதலை இயக்கத்தைப் போன்ற ஏனைய விடுதலை இயக்கங்கள் மிகப் பலமான கட்சி அமைப்புக்களைக் கொண்டிருந்தன. ஆனால் புலிகள் இயக்கம் அவ்வாறான ஒரு கட்சி அமைப்பை தொடர்ச்சியாப் பேணவில்லை. தவிர, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிதவாத கட்சிகளையும் கூட அவர்கள் முழுமையாக நம்பினார்கள் என்று கருதமுடியாது.

கூட்டமைப்புக்கு கிளிநொச்சியில் ஓர் அலுவலகத்தைத் திறப்பதற்கு அவர்கள் அனுமதித்திருக்கவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். எனவே புலிகள் இயக்கம் தனது உறுப்பினர்களை நேரடியாக தேர்தல் அரசியலில் இறக்குவதற்கு பெரும்பாலும் தயக்கம் காட்டிய ஓர் இயக்கமாகவே காணப்பட்டது. எனவே அந்த இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடும்பொழுது அந்த இயக்தக்தின் கொள்கைகளை முழுமையாகப் பிரதிபலிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் – புலிகள் இயக்கம் எனப்படுவதை அதன் தலைமைத்துவத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஆந்த இயக்கத்தின் அடையாளமாகவும், இதயமாகவும், ஆன்மாவாகவும் காணப்பட்டது அதன் தலைமைதான். அந்தத் தலைமை இல்லை என்றால் அதைப் புலிகள் இயக்கம் என்று அழைக்க முடியாத அளவிற்கு அந்த இயக்கமானது தலைமையைச் சுற்றி கட்டி எழுப்பப்பட்டிருந்தது. ஆந்த இயக்கமும் அதன் தலைமையும் ஒரு காலகட்டத்தின் விளைவுகளே. ஆவை கெடுபிடிப்போரின் குழந்தைகளே. இப்பொழுது அந்த காலகட்டம் மாறிவிட்டது. ஆந்தத் தலைமையும் இல்லை.எனவே அந்தத் தலைமை இல்லாத ஒரு வெற்றிடத்தில் இப்பொழுது மிஞ்சியிருப்பவற்றை முழுமையான பொருளில் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சிகள் என்று கூற முடியாது. வேண்டுமானால் அவற்றை வேறு பெயர்களில் அழைக்கலாம்.

கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் அந்த இயக்கத்தின் தொடர்ச்சிகளாகக் தங்களைக் நிறுவ முயன்ற எவரும் அல்லது எந்த அமைப்பும் அதில் வெற்றிபெற முடியவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே இப்பொழுது யாழ்ப்பாணத்தில் உருவாகியிருக்கும் புதிய சேர்க்கையையும் பார்க்க வேண்டும். எனவே இப்புதிய சேர்க்கைகள் தேர்தலில் பெறப்போகும் வெற்றி தோல்விகளை புலிகள் இயக்கத்தின் வெற்றி தோல்விகளாகக் காட்ட முடியாது.

மூன்றாவது- தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது ஒப்பீட்டளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கைகளுக்கு அதிகம் கிட்டவாக நிற்கிறது. ஆயின் கடந்த ஆறு ஆண்டுகளில் அந்தக் கட்சி பெற்ற தோல்விகளை புலிகள் இயக்கத்தின் தோல்விகளாக வியாக்கியானம் செய்யலாமா?

எனவே மேற்கண்டவைகளின் அடிப்படையில் கூறின் முன்னாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இம்முறை தேர்தலில் இறங்கும் போது பெறப்போகும் வெற்றி தோல்விகளை அந்த இயக்தக்தின் வெற்றி தோல்விகளாக வியாக்கியானம் செய்ய முடியாது. ஆனால் இது ஒரு கோட்பாட்டு விளக்கம் மட்டுமே. சாதாரண தமிழ் வாக்காளர்கள் சிக்கலான கோட்பாடுகளுக்கூடாகவோ ராஜதந்திரமாகவோ சிந்திக்கப் போவதில்லை. ஆவர்கள் எளிமையான தர்க்கங்களுக்கூடாகவே சிந்திப்பார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அப்படிச் சிந்தித்துத்தான் மகிந்தவைத் தோற்கடித்தார்கள். எனவே தேர்தலில் புதிதாக இறங்கும் முகங்களை அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? கூட்டமைப்பின் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் ஓர் பின்னணியில் அவர்கள் எத்தகைய முடிவுகளை எடுப்பார்கள்? இது வாக்களிப்பு நிலவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்துமா? இது முதலாவது.

இரண்டாவது-முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பின்னணிகள் பற்றிய சந்தேகங்கள். அவர்கள் தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள். எனவே அவர்களைத் தடுத்து வைத்தவர்களோடு அவர்களுக்குத் தொடர்புகள் இருக்கும். அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் தரப்பில் அரசியலில் ஈடுபடுவோர், பிரமுகர்களாக துருத்திக் கொண்டு திரிவோர், பெரும் பதவிகளை வகிப்போர் போன்ற எல்லோருக்குமே சிறிலங்காப் படைத்துறையினருடன் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவே செய்யும். ஏனெனில் தமிழ்ப் பகுதிகளின் நிர்வாகம் படைத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்து வந்துள்ளது. இதில்; படைத்தரப்போடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகள் எதுவுமற்ற ஓர் அரசியல்வாதி என்று யாராவது தன்னைக் கூறிக்கொள்ள முடியுமா? அவ்வாறு தொடர்புகளைப் பேணாமல் அரசியல் செய்யத்தக்க ஒரு அரசியல் சூழல் வடக்குக் கிழக்கில் உண்டா? இத்தகையதோர் பின்னணியில் 2009 மே க்குப் பின் அதிகம் ஆபத்துக்குள்ளாகக்கூடியதரப்பாகக் காணப்படும் தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒரு விதத்தில் படைத்தரப்போடு தொடர்புகளைப் பேணவேண்டியே இருக்கும். இது 2009 மே க்குப் பின்னரான ஒரு யதார்த்தம்.

தடுப்பில் இருந்து வந்தவர்களைக் குறித்தும் வன்னியால் வந்தவர்களைக் குறித்தும் இது போன்று ஏராளமான ஊகக்கதைகள் உண்டு. ஒரு காலகட்டத்தில் யாரை தேவ தூதர்கள் என்று இந்த சமூகம் மதித்ததோ அவர்களையே இன்று அரசாங்கத்தின் முகவர்களோ என்று சந்தேகிக்கும் ஒரு கொடுமையான நிலை.

சில ஆண்டுகளுக்கு முன் லண்டனில் வசிக்கும் ஒரு மூத்த செயற்பாட்டாளர் கூறினார் “முன்னாள் இயக்கத்தவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பேணுகிறது என்பதை வைத்தே இந்தச் சமூகம் விடுதலைக்குத் தகுதியுடையதா இல்லையா என்பதை அளவிட முடியும்… 1980களின் பிற்கூறில் புலிகளால் தடைசெய்யப்பட் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்கொண்ட ஆபத்துக்களையும் அதேவிதமான குற்றச்சாட்டுக்களையும் இப்பொழுது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் எதிர் கொள்கிறார்கள்” என்று.

இது தமிழ்ச் சமூகத்தின் கூட்டு மனோநிலையின் ஒரு கூறாகவே காணப்படுகின்றது. அதாவது பலியாடு தப்பி வரக் கூடாது. தப்பினால் அது தெய்வக் குற்றம். பலியாடு பலியாவதுதான் புனிதமானது. உன்னதமானது. தப்பி வந்தால் அது வீழ்ச்சிதான். இவ்வாறு சிறு தொகுதி தியாகிகளையும் பெரும்தொகுதி பார்வையாளர்களையும் வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பட்டதே தமிழர்களுடைய ஆயுதப் போராட்டமாகும். யாருடையதோ பிள்ளை சாகும் காயமடையும் ஆனால் எங்களுடைய பிள்ளை மட்டும் படித்துப் பட்டம் பெறும் அல்லது வெளிநாடு போகும். அதன் வயதொத்தவர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது எங்களுடைய பிள்ளை தப்பிச் சென்றது எங்களுக்கு ஒரு குற்றமாகத் தெரிவதில்லை. ஆனால் ஒரு பொது இலட்சியத்திற்காக தன்னை ஒப்புவித்த பிள்ளை சாகாமல் திரும்பி வந்தது ஒரு வீழ்ச்சியாகத் தெரிகிறது.

அண்மையில் முகநூலில் ஒரு குறிப்பு இருந்தது. அதை எழுதியவரின் பெயரை மறந்துவிட்டேன் என்னை அவர் மன்னிக்க வேண்டும். அந்தக் குறிப்பு பின்வருமாறு கூறுகிறது. எமது தமிழ்க்கட்சிகளுக்கு இறந்து போனபுலிகள் தேவை ஆனால் உயிரோடு இருக்கும் புலிகள் தேவை இல்லை” என்று.

இதைப் போல வேறு ஒரு உதாரணத்தை இங்கு காட்டலாம். அண்மையில் வித்தியாவுக்காக நிகழ்ந்த போராட்டங்களின் போது “அவர்கள் இருந்திருந்தால்” என்ற ஒரு சுலோகம் காணப்பட்டது. இது பலராலும் சிலாகித்துக் கதைக்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு குரூரமான உண்மை மறைந்திருக்கிறது. அச்சுலோகங்களில் காணப்பட்ட ‘அவர்கள்’ என்ற சொல் ஒரு படர்க்கைச் சொல். அதாவது விடுதலைப் புலிகளை அது படர்க்கையில் வைத்து விழிக்கிறது. சமூகத்தின் பொரும்பாலானவர்கள் தங்களைத் ‘தன்மையில்’ வைத்துக்கொண்டு சிறுதொகைப் போராளிகளைப் ‘படர்க்கையில்;’ விழிக்கிறார்கள். தாங்கள் ‘அவர்களாக’ மாறாமல் ‘அவர்கள்’ வேண்டும் என்று கேட்பது இக்கட்டுரையில் முன்பு சொல்லப்பட்டதைப் போன்று சிறுதொகைத் தியாகிகளையும் பெரும்தொகைப் பார்;வையாளர்களையும் கொண்ட ஒரு போராட்டச் சூழல்தான்.

இப்பொழுது ‘அவர்கள்’ தடுப்பில் இருந்து வந்தபின் நாங்கள் ‘அவர்களைச்’ சந்தேகக் கண்கொடு பார்க்கிறோம். 2009மேக்குப் முன்புவரை ‘அவர்களாக’ மாறத் தயாரற்றிருந்தவர்களே இப்பொழுது அவர்களைச் சந்தேகிக்கிறார்கள். தாங்கள் ‘அவர்களாக’ மாறியிருந்திருந்தால் அப்படி ஒரு பேரழிவும் பெரும் தோல்வியும் வந்திருக்காது என்ற குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக ‘அவர்களை’ குற்றவாளிகளாக்க முற்படுகிறார்கள். அதாவது குற்ற உணர்ச்சியின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத் தராசு.2009 இற்கு முன்பு “அவர்களாக” மாறாதவர்களில் பலர் இப்பொழுது நீதிபதிகளாகிவிட்டார்கள். பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்றவரெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாகி விட்டார்கள்.முந்தித் தப்பியவர்கள் நீதிபதிகளாகியபோது பிந்தித் தப்பியவர்கள் துரோகிகளாக்கப் பட்டுவிட்டார்கள். இதில் மூத்த எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் அறிவுஜீவிகளும் அடங்குவர்.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு (There are conspiracies without theories.There are conrpiracy theories without conspiracies) “கோடுபாடுகள் இல்லாமலே சூழ்ச்சிகள் நிழ்வதுண்டுசூழ்ச்சிகள் இல்லாமலே சூழ்;ச்சிக் கோட்பாடுகள் இருப்பதுமுண்டு.” 2009 மே க்குப் பின் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர் இவ்வாறு சூழ்;ச்சிக் கோட்பாடுகளால் பீடிக்கப்பட்டுவிட்டார்கள்.

இதை இவ்வாறு எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய சேர்க்கையை நியாயப்படுத்துகிறது என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. தடுப்பில் இருந்து வந்தவர்கள் தொடர்பில் தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கும் நோய்க்கூறான ஒரு நோக்குநிலை மீதான விமர்சனமே இது. மாறாக யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கட்சி தொடர்பாக எழுப்பப்படும் நியாயமான கேள்விகளையும் தர்க்கபூர்வமான சந்தேகங்களையும் இக்கட்டுரை ஏற்றுக்கொள்கின்றது.

ஒரு பெரும் தோல்விக்கும் பேரழிவுக்கும் பின் நிலைமைகள் இப்படித்தான் இருக்கும். யார் யாரோடு நிக்கிறார்கள். யாரை யார் கையாழுகிறார்கள் யார்யாரிடம் சம்பளம் வாங்குகிறார்கள் போன்ற விடையற்ற கேள்விகளின் மத்தியில் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 2009 மே க்கு முன்பு ஒருவர் தன்னுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்கு உடனடியான ஒரு களம் இருந்தது. தனது நம்பிக்கைகளுக்காக ஒருவர் எத்தகைய தியாகங்களைச் செய்ய முடியும் என்பதை அவர் அந்தக் களத்தில் நிரூபிக்கக் கூடியதாக இருந்தது, அது ஒரு போர்க்களம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக நிலைமை அவ்வாறு இல்லை. மிதவாத அரசியலில் குறிப்பாக பெருந்தோல்விக்கும் பேரழிவுக்கும் பின்னரான அரசியலில் ஒருவர் தன்னுடைய விசுவாசத்தை எண்பிப்பதற்கு உடனடியான களங்கள் எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் வாழ்ந்துதான் நிரூபிக்க வேண்டும். எல்லாவற்றையும் வாழ்ந்துதான் கடக்கவும் வேண்டும்.

இப்பொழுது தேர்தலில் இறங்க உத்தேசித்திருக்கும் முன்னாள் புலி இயக்க உறுப்பினர்கள் தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் ஊகங்களா அல்லது உண்மைகளா?என்பதை வாழ்ந்தே நிரூபிக்க வேண்டும். அவர்கள் அதை நிரூபிக்கலாம் நிரூபிக்காமலும் விடலாம். ஆனால் வரவிருக்கும் தேர்தலில் சாதாரண தமிழ் மனோநிலையில் அவர்களுடைய வருகையானது ஏதோ ஒரு சலனத்தை ஏற்படுத்தவே போகிறது. அதோடு வடமாகாணசபை உறுப்பினராக உள்ள அனந்தி சுயேட்சையாக தேர்தலில் இறங்கப்போவதாகக் கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் மேலும் புதிதாகக் காய்கள் நகர்த்தப்படலாம். இதெல்லாம் தமிழ் வாக்குகளைச் சிதறச் செய்யக் கூடும். இரண்டு முதன்மைத் தமிழ்க்கட்சிகளினுடையதும் வாக்குத் தளங்களை அரிக்கக் கூடிய புதிய வளர்ச்சிகள் இவை.

கூட்டமைப்பானது தமிழ்வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தனக்குக் கிடைக்குமாக இருந்தால் தனது பேரம் பேசும் பலத்தை நாடாளுமன்றத்தில் நிறுவுவதன் மூலம் ஒரு தீர்வை நோக்கி நகர முடியும் என்று நம்பிக்கையூட்ட முற்படுகிறது. ஆனால் தமிழ் வாக்குகள் கூட்டமைப்புக்கு ஒரு திரளாககக் கிடைக்குமோ இல்லையோ சிங்கள வாக்குகள் ஒரு புதிய திரட்சியை நோக்கி நகர்வது மட்டும் தெரிகிறது.

யுத்தத்தை வென்றதினால் மகிந்த இப்பொழுதும் பலமாகக் காணப்படுகிறார். அதே சமயம் அரசியல் அமைப்பின்படி மைத்திரியும் பலமாகக் காணப்படுகிறார். தவிர மைத்திரி ஒரு தனி ஆளும் அல்ல. அவர் மாற்றத்தை உருவாக்கிய சக்திமிக்க நாடுகளின் கருவியுமாவார். எனவே பலமாக இருக்கும் மகிந்தவை வெளியில் வைத்துக் கையாள்வதை விடவும் அணைத்துக் கெடுப்பது நல்லது என்று மைத்திரி சிந்திக்கக் கூடும். எதுவாயினும் சிங்கள மக்கள் மத்தியில் இவ்வாறான சேர்க்கைகள் உருவாகும் போது வரவிருக்கும் புதிய அரசாங்கமானது தமிழ் மக்களின் வாக்குகளில் தங்கியிருப்பதற்கான வாய்ப்புக்கள் முன்னரைவிட குறையக் கூடும்.

ஒரு புறம் சிங்கள வாக்காளர்கள் புதியதிரட்சியை நோக்கிப் போகிறார்கள். இன்னொரு புறம் தமிழ் வாக்குகளோ சிதறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இது நல்லதுக்கா? அல்லது கெட்டதுக்கா?

-http://www.tamilcnn.org

TAGS: