அமெரிக்கா ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

iran-usa_459வியன்னா: அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறும் வகையில் ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளாது என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை, வரவேற்பைப் பெற்றுள்ள அதே நேரத்தில் ஈரானின் எதிரியான இஸ்ரேலின் எதிர்ப்பை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் உலகின் வரலாற்றுப் பிழை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ குற்றம்சாட்டியுள்ளார்.வியன்னாவில் கடந்த 18 நாட்களாக ஈரானுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ெஜர்மனி நடத்திய பேச்சுக்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனை பின்பற்றுவது குறித்து ஈரான் மற்றும் உலக நாடுகளின் அமைச்சர்கள் இறுதிகட்ட பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் இந்த ஆலோசனையில் அங்கம் வகித்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்தப் பேச்சுக்கள் முடிந்து உடன்படிக்கை ஏற்பட்டு இருப்பதை ஈரான் நாட்டின் பிரதிநிதியும் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் அணு ஆயுதம் உருவாக்கும் திட்டம் குறித்த சந்தேகம் பற்றி தாம் ஆய்வு மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக இந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் அணு கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த உடன்படிக்கையானது ஈரானின் அணுத் திட்டங்களை தடுப்பதுடன் கடுமையான ஐ.நா சோதனைகளுக்கும் வழிவகுப்பதுடன் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்க முயற்சிப்பதை தடுக்கும்.

இதற்கு பதிலாக ஐ.நா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும். ஈரான் அணு ஆயுத்ங்களை தயாரிக்கும் நோக்கத்துடன் கடந்த பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. ஈரான் அதிபராக ஹசன் ரவுஹானி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இடைக்கால உடன்படிக்கை எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சாதனையாக கருதப்படுகிறது. ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்றும் ஈரான் அணுகுண்டுகளை வைத்துக் கொள்ளாது என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகளுக்கு பிறகே உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமெரிக்காவும் அதன் சர்வதேச பங்குதாரர்களும் நடத்திய பேச்சின் அடிப்படையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

‘இந்தியாவுக்கு சாதகம்-பாதகம்’

ஈரான் அணு உடன்படிக்கை எட்டப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அந்த நாடு மீதான பொருளாதாரத் தடையும் விலக உள்ளதால் இந்தியாவுக்கு நன்மைகள் கிடைப்பதை விட பாதிப்புகளே அதிகம் கிடைக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

* இந்த உடன்பாடு காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் அதிக பயன்பெறும். இந்த நிறுவனங்கள் பங்குகள் இன்று ஏறுமுகத்தில் இருந்தன.
* எண்ணெய் விலை குறையும் என்பதால் எண்ணெய் துரப்பண நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
* உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு தொழிற்சாலை வைத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் இதன் காரணமாக பயனடையலாம்.
* ஈரான் நாட்டிலிருந்து 35 சதவிகித வருவாய் பெறும் அபான் நிறுவனத்திற்கும் பயன்பெறும். அந்த நிறுவனத்தின் பங்குகளும் இன்று ஏற்றம் கண்டன.
* பொருளாதாரத் தடை நீங்கும் போது ஈரான் மற்ற நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் என்பதால் தற்போது குறைந்த விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு தொடர்ந்து கிடைக்காது. அளவு குறையும் வாய்ப்பு உள்ளது.
* பொருளாதார தடைகள் நீக்கப்படுவதால் உள்நாட்டு மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பண்டக நிறுவனங்கள் பலனடையும் என தெரிகிறது. ஆனால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
* நுகர்வோர் பொருட்களைப் பொருத்த வரையில் இந்திய நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.

-http://www.dinakaran.com