உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளுக்கு தாற்காலிக சுயாட்சி வழங்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக, அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்திடம் அதுதொடர்பான கருத்தை உக்ரைன் நாடாளுமன்றம் கோரியுள்ளது.
உக்ரைனில் அரசுப் படையினருக்கும், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, கிளர்ச்சிக் குழுத் தலைவர்கள் ஆகியோரிடையே கடந்த பிப்ரவரி மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு தாற்காலிக சுயாட்சி வழங்க உக்ரைன் அரசு ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், கிளர்ச்சிப் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்குவதற்காக சட்டத்திருத்தம் மேற்கொள்ள அரசியல் சாசனத்தில் இடமுள்ளதா என்பதை தெளிவுபடுத்துமாறு உக்ரைன் அரசியல் சாசன நீதிமன்றத்திடம் கோரும் தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் பதிவாகின.
-http://www.dinamani.com