இந்தியச் சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த கைதிகளை விடுதலை செய்யக்கோரி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.
பிரிட்டன் சீக்கிய கூட்டமைப்பைச் சேர்ந்த அவர்கள், லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பு கூடி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
இந்தியச் சிறைகளில், அரசியல் கைதிகளாக பல சீக்கியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், 60 முதல் 70 வயதைக் கடந்துவிட்டனர்.
அவர்களின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டும், மனிதாபிமான அடிப்படையிலும் அவர்களை இந்திய அரசு விடுதலை செய்ய வேண்டும்.
பாபு சூரத் என்னும் சீக்கிய ஆர்வலர், தனது மகன் சிறைப்படுத்தப்பட்டு போலீஸாரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
-http://www.dinamani.com