இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குலில் 115 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் தியாலா மாகாணத்திலுள்ள கான் பானி சாட் நகரில் ஈகைப் பெருநாளான வெள்ளிக்கிழமை நெரிசல் மிக்க சந்தைப் பகுதியில் வெடி பொருள் நிரம்பியக் காரை மோதச் செய்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
ஷியா பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நகரம், பாக்தாதுக்கு 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தாக்குதல் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஈகைப் பெருநாளன்று ஷியாக்களை குறி வைத்து தாக்குதல் நிகழ்த்துவதை பயங்கரவாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
எனினும், வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதல் மிகவும் பயங்கரமானது.
சக்தி வாய்ந்த அந்த தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர். 170 பேர் காயமடைந்தனர். ஈகைப் பெருநாளுக்காக பொருள்கள் வாங்குவதற்காக சந்தையில் ஏராளமானோர் கூடியிருந்த சமயம் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கான் பானி சாட் நகருக்கு ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என கடந்த ஜனவரி மாதம் இராக் அரசு அறிவித்திருந்த நிலையிலும், கடந்த சில வாரங்களாக அங்கு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள், தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரில் 3 டன் வெடி பொருள் நிரப்பப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
மிகவும் சக்தி வாய்ந்த அந்தக் கார் குண்டு வெடித்ததில், அந்தப் பகுதி மிகப் பெரிய அளவில் சேதமடைந்ததாகவும், சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்தி வரும் தாக்குதல்களில் மிக அதிக உயிர்களைப் பலி வாங்கிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.
-http://www.dinamani.com