எகிப்து ராணுவத் தாக்குதல்களில் 59 பயங்கரவாதிகள் பலி

egypt02எகிப்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 59 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பதற்றம் நிறைந்த வடக்கு சினாய் பகுதியில் பல்வேறு இடங்களில் இந்தத் தாக்குதல்களை ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.

பயங்கரவாதிகளின் தலைமையிடம் என்று கருதப்படும் ஷேக் ஜவாயீத் என்ற பகுதியிலுள்ள கபால் அலிகா என்ற இடத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செயதித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது சமீர் தலைநகர் கெய்ரோவில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

வடக்கு சினாய் பகுதியில் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல்களில் குறைந்தபட்சம் 59 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
முக்கிய பயங்கரவாதி உள்பட நால்வர் உயிருடன் பிடிபட்டனர்.

கபால் அலிகாவில் நடத்திய ராணுவத் தாக்குதல் நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகள் பயன்படுத்திய வாகனங்கள் தகர்க்கப்பட்டன. அவர்களின் மறைவிடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

வடக்கு சினாய் பகுதியில் உம் ஷிஹான் எனும் கிராமத்தில் நடத்திய அதிரடித் தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில், மேலும் நான்கு பயங்கரவாதிகள் பிடிபட்டனர். இவர்களில் அகமது கமால் சலீம் என்ற அதிபயங்கரவாதியும் ஒருவர்.
எகிப்து பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டவர் இவர்.

அல்-அரீஷ் நகரில் மூன்று இடங்களில் ராணுவம் நடத்திய தாக்குதல்களில், பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன. இத்தாக்குதல்களில் 14 பயங்கரவாதிகள் பலியாகினர் என்றார் அவர்.

ஏறத்தாழ முப்பதாண்டு காலம் அதிபராகப் பதவி வகித்த ஹோஸ்னி முபாரக் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியில் பதவி இழந்தார்.
அப்போதிலிருந்து, எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் பயங்கரவாதிகளின் செயல்பாடு தீவிரமடையத் தொடங்கியது.

ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்த பிறகு, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முகமது மோர்ஸி இரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சிக்கு மக்களிடையே பலத்த எதிர்ப்பு தோன்றி, எகிப்து ராணுவம் 2013-இல் ஆட்சியைக் கைப்பற்றியது.

அப்போதிலிருந்து வடக்கு சினாய் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள், ராணுவத்தினருக்கு எதிராக மேலும் கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
பயங்கரவாதத் தாக்குதல்களில் எகிப்து பாதுகாப்புப் படை வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, அந்நாட்டு ராணுவம் வடக்கு சினாய் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

-http://www.dinamani.com