கன்பூசியஸ் கோயிலை புதுப்பிக்கிறது சீன அரசு

சீனத் தத்துவ ஞானி கன்பூசியஸ் நினைவாக எழுப்பப்பட்ட, 2,500 ஆண்டு பழைமை வாய்ந்த கோயிலைப் புதுப்பிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை வாழ்ந்த தத்துவ ஞானி கன்பூசியஸ். அவர் மறைந்த ஓரிரு ஆண்டுகளிலேயே, ஷான்டோங் மாகாணத்தில் உள்ள அவருடைய பிறப்பிடமான குஃபுவில் கோயில் எழுப்பப்பட்டது.

குஃபு நகரில் உள்ள கன்பூசியஸ் கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ 1994-ஆம் ஆண்டு அறிவித்தது. அத்துடன், கன்பூசியஸ் குடும்ப மாளிகையெனக் கருதப்படும் இடமும் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்த இடங்கள் அமைந்துள்ள 1.4 லட்சம் சதுர மீட்டர் பரப்புள்ள வளாகத்தில், 1,300-க்கும் மேற்பட்ட கட்டடங்கள், சுமார் 5,000 கல்வெட்டுகள், சுமார் 1 லட்சம் அரும்பொருள்கள் உள்ளன.

கடந்த 2,500 ஆண்டுகளாக சீனாவை ஆண்டுவந்த பல்வேறு ஆட்சியாளர்களும் இந்த வளாகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, கன்பூசியஸ் தத்துவத்தை மாசேதுங் கடுமையாக விமர்சித்து வந்தார். எனினும் மாசேதுங் மறைவுக்குப் பிறகு, கன்பூசியஸ் சித்தாந்தம் மீண்டும் முக்கியத்துவம் பெறும் விதமாக சீன அரசு நடந்து கொண்டது.

இந்த நிலையில், ஏறத்தாழ நூறாண்டுகளுக்குப் பிறகு, கன்பூசியஸ் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் பழமை மாறாமல் புதுப்பிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

48 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 290 கோடி) செலவாகும் புதுப்பித்தல் பணியைச் செய்து முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது.

குஃபு கன்பூசியஸ் பாரம்பரிய கட்டடப் பொறியியல் ஆணையம் இந்த வளாகத்தைப் பராமரித்து வருகிறது. புதுப்பித்தல் பணியை இந்த ஆணையம் மேற்கொள்ளும். இதன் முதல் கட்ட நடவடிக்கை சனிக்கிழமை தொடங்கியது.

குஃபுவில் உள்ள கன்பூசியஸ் கோயிலைக் காண, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டுக்கு 1 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

-http://www.dinamani.com