துருக்கியில் ஐஎஸ் அமைப்பு நடத்திய பயங்கர குண்டு வெடிப்பில் 30 பேர் பலி

isis_irakஅங்காரா: சிரியா – துருக்கி எல்லையில் துருக்கியில் உள்ள சுரக் நகரில் நேற்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்புக்கு 30 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டின் தென்கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள நகரம், சுரக். இது சிரியா நாட்டையொட்டி அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று மதியம், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் திடீரென குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 27 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று பலியானதால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இக்குண்டுவெடிப்பில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதியில் உடல்கள் சிதறி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் காட்டுகின்றன.

அந்தப் பகுதியில் இருந்த அமாரா என்னும் கலாச்சார மையம் ஒன்றின் பூங்காவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான துருக்கிய இளைஞர்களும், குர்துகளும் சந்தித்து சிரியா நாட்டிலுள்ள நகரான கொபானியை மீண்டும் கட்டுதல் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.கிட்டதட்ட அவ்விடத்தில் 300 பேர் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் குழுவின் தீவிரவாதிகளே நடத்தியிருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. கொபானி நகரை சிரியா மற்றும் குர்து படைகள் கூட்டாக முன்னெடுத்தத் தாக்குதலில் அந்நகரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இழந்திருந்தது. தற்கு பழிவாக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இக்குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

tamil.oneindia.com