கேமரூனில் சிறுமி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
கேமரூனின் வடக்கில் உள்ள முக்கிய நகரான மரூவாவில், மதுபான விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் சுமார் 80 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இது போன்ற தற்கொலைத் தாக்குதல்களை, அண்டை நாடான நைஜீரியாவின் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நிகழ்த்துவது வழக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.
மரூவா நகரில் உள்ள பிரபலமான “பூக்கன்’ மதுபான விடுதியில் சுமார் 12 வயது மதிக்கத் தக்க சிறுமி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். சுமார் 80 பேர் காயமடைந்தனர் என்று கேமரூன் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
அண்டை நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்கள் எல்லை தாண்டி, கேமரூனிலும் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளில் அந்த நாட்டு ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வெடிகுண்டுகள் பொருத்தி, குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி வருவது அதிகரித்ததைத் தொடர்ந்து, கேமரூனின் பல பகுதிகளில் இரவில் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
-http://www.dinamani.com