இந்திய மத்திய அரசு 13 வது திருத்த சட்டத்தையே தமிழ் மக்களிற்கு தரமுற்பட்டாலும் நாம் அதனை நிராகரித்துள்ளதுடன் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன்.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் அவர் மேலும் உரையாற்றுகையினில் வட-கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வையே கூட்டமைப்பு தற்போது முன்வைப்பதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் இந்தியாவோ 13 வது திருத்தச்சட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லையென்ற செய்தி இந்தியாவிற்கு தெளிவான சொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
கொழும்பினில் இப்போது வெள்ளைவான் வந்துவிட்டதாக கூப்பாடு போடும் மஹிந்த-கோத்தபாய தரப்பு இதே வெள்ளை வான்களை வைத்து கடத்திய மற்றும் கொலை செய்த தமிழ் இளைஞர்,யுவதிகள் பற்றி பேசத்தயாராவென கேள்வி எழுப்பினார்.விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 700இற்கும் அதிகமான வாகனங்களை போலி இலக்க தகடுகளுடன் இராணுவம் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.அதனை அரச அமைச்சரும் நியாயப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
-http://www.pathivu.com