நாட்டில் ஏற்பட்டுள்ள சில அரசியல் நடப்புகளைப் பார்க்கையில் 1எம்டிபி மீதான விசாரணைகள் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை என்று கூறும் ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா (டிஐ-எம்) விசாரணைகளுக்கு முழுக்குப் போடப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
1எம்டிபி மீது தனித்தனியே இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் கணக்குக்குழு. மற்றது போலீஸ், மலேசிய ஊழல்தடுப்பு ஆனையம், பேங்க் நெகாரா, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் ஆகியவை அடங்கிய சிறப்புப் பணிக்குழு.
இக்குழுக்களின் விசாரணைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட நின்று போனதாகவே தெரிகிறது என டிஐ-எம் தலைவர் அக்பார் சத்தார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அதிரடியான மாற்றங்கள், விசாரணைமீது சந்தேகம் கொள்ள வைக்கின்றன.
(1) விசாரணையில் சம்பந்தப்பட்டிருந்த சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலை பதவியிலிருந்து அகற்றியது,
(2) போலீஸ் சிறப்புப் பிரிவுக்கு முகம்மட் பூஸி ஹருன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டது, புக்கிட் அமானில் சிறிய தீ விபத்து ஏற்பட்டு அதில் “முக்கியமில்லாத” ஆவணங்கள் எரிந்துபோனதாகக் கூறப்பட்டிருப்பது,
(3) பிஏசி-இன் 13 உறுப்பினர்களில் அக்குழுவின் தலைவர் உள்பட, நால்வருக்கு அரசாங்கப் பதவிகள் கொடுக்கப்பட்டிருப்பது
இவற்றையெல்லாம் மலேசியர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள் என்றார் சத்தார்.
“விசாரணைகள் நத்தை வேகத்தில் நடைபோட்டதையும் பிஏசி-இன் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டதையும் ஜூலை 28-இல் நிகழ்ந்த பதவிநீக்கங்களையும் கண்டு அறிவார்ந்த மலேசியர்கள் என்ன நினைப்பார்கள்?
“1எம்டிபி விசாரணையைத் தடுத்து நிறுத்த ஒருமுகமான முயற்சி நடப்பதாகத்தான் நினைப்பார்கள்”, என சத்தார் கூறினார்.
இந்த விசாரணையின் சந்தேகப் பேர்வழி ஒரு சாதாரண குடிமகனாயின், இந்நேரம் அவன் இரத்த வாந்தி எடுத்திருப்பான்!! ஏன்! ஒருகால், விசாரணை வேகத்தில் தடுப்புக் காவலிலேயே அரை உயிராயிருப்பான் !!! ஆனால், இவ்விவகாரத்தில், சந்தேகப் பேர்வளிக்கு சிறந்த பாதுகாப்பு மரியாதை. விசாரணையோ (நொண்டி) ஆமை வேகத்தில் சிரிப்பாய் சிரிக்கிறது!!!
விசாரணை என்று சொல்லும்போதே இது ஆறப்போடும் தந்திரம் என்று எங்களுக்குத் தெரியுமே. இறுதியில் தவறு ஏதும் நடக்கவில்லை என்று அறிக்கை வந்தாலும் நாங்கள் ஒன்றும் ஆச்சரியப் பட போவதில்லை.
உங்கள் விசாரணை உப்பு சப்பில்லாமல் செய்துவிடுவோம். MH370 உடைந்த பாகங்களை கண்டு பிடித்துவிட்டதாக சொல்லியுள்ளோம். இன்னும் பல முக்கிய விஷயங்களை சொல்லி 1MDB விஷயத்தை மறக்கடிப்போமே.
அப்படியே அறிவார்ந்தவர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்து கெடுத்துவிடலாம்!