பயணிகள் விமானம் நடுவானில் தகர்ப்பு: ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்தது ரஷியா

mhகிழக்கு உக்ரைன் வான் பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழத்தப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு நடுவர் குழு அமைக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை, ரஷியா தனது “வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது.

உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைனில், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பறந்து சென்ற மலேசியன் ஏர்லைன்ஸýக்குச் சொந்தமான விமானம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி சுட்டு வீழத்தப்பட்டது. இதில் விமானத்திலிருந்த 298 பேர் உயிரிழந்தனர்.

ரஷியா அளித்த நவீன ஏவுகணைச் சாதனங்களைக் கொண்டு கிளர்ச்சியாளர்கள் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதனை மறுக்கும் ரஷியா, உக்ரைன் ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி வருகிறது.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் குறித்து விசாரிப்பதற்காக, சிறப்பு நடுவர் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் ஆஸ்திரேலியா, மலேசியா, நெதர்லாந்து நாடுகளால் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்துக்கு ஆதரவாக கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன.
அங்கோலா, சீனா, வெனிசூலா ஆகிய நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன.

இந்த நிலையில், தனது “வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷியா அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ள ரஷிய விசாரணை அதிகாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும், சிறப்பு நடுவர் குழு அமைக்கப்பட்டால் அது பாரபட்சமான விசாரணையை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளதாகவும் கூறி, ரஷியா அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது.

-http://www.dinamani.com