காரீபியன் கடலில் அமைந்துள்ள ஹைதி தீவில், கடலை ஒட்டியுள்ள சேரி மக்கள் உணவு கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர்.
இவர்கள், உப்பங்கழிகளில் உள்ள சேற்றை குழைத்து, வட்டவடிவில் ரொட்டி போல வார்த்து, சூரிய வெப்பத்தில் உலர்த்தி, அதை உணவாக சாப்பிடுகின்றனர்
இந்த ’சேறு கேக்’ சாலையோர கடைகளில் விற்பனையும் செய்யப்படுகிறது.
சிலர் இந்த சேற்றோடு உப்பும் சில காய்கறிகளும் சேர்த்தும் சாப்பிடுகின்றனர். மூன்று வேளையும் இதை சாப்பிடுகின்றனர். இப்படி பல வருடங்களாக சாப்பிட்டு வருகின்றனர்.
ஹைதியில் வாழும் கறுப்பர் இனத்து சேரி மக்கள் தங்களுக்கு எந்த வாழ்வாதாரமோ வருமானமோ இல்லாமல் இருப்பதாலும், பஞ்சத்தின் காரணமாக சோளம், கோதுமை, அரிசி, காய்கறிகளின் விலை ஏறிப் போனதாலும் வேறுவழியின்றி வயிற்றை மூன்றுவேளை நிரப்ப வேண்டுமே என்ற விரக்தியோடுதான் சாப்பிடுகின்றனர்.
எங்கேயோ எண்ணெய்யும், இயற்கை எரிவாயுவும் விலை உயர்த்தப்பட்டதால் அதன் அழுத்தம், இந்த ஏழ்மை நாட்டு மக்கள், தங்கள் வயிற்றை களிமண்ணால் நிரப்பும் அபாயத்தில் தள்ளியிருக்கிறது.
இந்த களிமண் கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் கால்சியம் சத்துக்காகவும் அமில முறிவுக்காவும் சிறிதளவு கொடுக்கப்பட்டது. அதுவே இந்த வறுமையில் உணவாக புகுந்துவிட்டது.
எந்தவித மருத்துவ ஆலோசனையும் இன்றி இதை சாப்பிடுவதால் உடம்புக்கு பாதிப்பு வருமே என்று கேட்டால், இதை சாப்பிடுவதால் சமயங்களில் வயிற்றுவலி ஏற்படும் என்று ஒரு மாத குழந்தையை இடுப்பில் வைத்திருக்கும் சார்லீனே என்ற 16 வயது தாய் கூறுகிறாள்.
மேலும் இதை சாப்பிட்டுதான் இந்த குழந்தையையும் பெற்றதாக கூறுகிறார். அவள் குழந்தை மெலிந்து (2.7 கி.கி) உள்ளது. இப்போதும் மூன்று வேளையும் இதையே சப்பிடுவதாக கூறுகிறார்.
இதனால் கடந்த ஏப்ரலில் அங்கு 5 பேர் இறந்துவிட்டனர். பலர் நோயாளியாகும் நிலையில் உள்ளனர்.
ஹைதி நாட்டின் பிரதமரும் அந்த ஏழ்மை நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டு மானியங்களையும் விலை சலுகைகளையும் அளித்து வருகிறார். ஆனாலும், இந்த பிரச்சனை இன்னும் சரியாகவில்லை.
பொதுவாக காரீபியன் தீவு நாடுகள் 40 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளன.
மேலும், 2007 ல் ஏற்பட்ட ஹாரிகேன் புயல் வெள்ளத்தில் உணவு மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தால், உலக அளவில் ஏற்பட்ட விலை ஏற்றம் ஹைதி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்துறை நிறுவனம் ஹைதி மற்றும் காரீபியன் நாடுகளை மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் உலகின் கவனத்துக்கு உரியதாகவும் அறிவித்திருக்கிறது.
இதற்கிடையில், காரீபியன் நாடுகளின் தலைவர்களும் வரும் டிசம்பரில் ஆலோசனை மாநாடு நடத்தி இங்கு இறக்குமதியை குறைக்கவும் தன்னாட்டிலே உற்பத்திக்கான உரிய பண்ணைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
உலகின் ஒரு பகுதியில் கோடிக்கணக்கான டன் கணக்கில் உணவுப் பொருள்கள் அழுகியும் உபரியாகவும் வீணாகிக் கொண்டிருப்பதையும் ஊடகங்கள் வாயிலாக செய்தியாக அறிகிறோம்.
மறுபுறம் ஏதுமில்லாமல் மண்ணை திண்ணும் மக்கள். இதை சரியான சமயங்களில் இடம் மாற்றி எல்லோரையும் நிறைவு செய்யும் உலக நிர்வாகம் உருவாவது எப்போது?
-http://world.lankasri.com
நாட்டை ஆள்பவர்கள் மனம் வைத்தால் எதுவும் சாத்தியம். ஹைதி தீவு மட்டும் அல்ல அனைத்துத் தீவுகளுக்கும் இது பொருந்தும்.