சாட் நாட்டில் 117 போகோ ஹராம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

boko_haramசாட் நாட்டில், போகோ ஹராம் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 117 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆஸம் பெர்மெண்டோ அகோனா கூறியதாவது:

சாட் ஏரி வழியாக சாட் நாட்டுக்குள் ஊடுருவி, பொதுமக்கள் மீது தாக்குதல் நிகழ்த்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த இரு வாரங்களாகவே முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 117 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

2 சாட் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஏராளமான படகுகள் அழிக்கப்பட்டன. அவர்களிடமிருந்து பல்வேறு வகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

நைஜீரியா, சாட், நைஜர், கேமரூன் ஆகிய நாடுகளை இணைக்கும் சாட் ஏரிப் பகுதி, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நான்கு நாடுகளிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகள், இந்தப் பகுதியில் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

-http://www.dinamani.com