போரைத் தொடரப்போவதாக தலிபான்களின் புதிய தலைவர் அறிவிப்பு

சமாதானப் பேச்சுக்கள் குறித்த செய்திகளை நிராகரித்த தலிபான்களின் புதிய தலைவரான முல்லா மன்சூர், தான் போரைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

talib1
போரைத் தொடரப்போவதாக தலிபான்களின் புதிய தலைவர் அறிவிப்பு

 

முல்லா ஒமார் மரணமானதை அடுத்து தலிபான் அமைப்புக்கு புதிய தலைவராக மன்சூர் நியமிக்கப்பட்டதில் தலிபான்களின் உயர் மட்டக் கவுன்ஸில் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று அந்த அமைப்பின் உயர்மட்டக் கவுன்ஸிலின் பேச்சாளர் ஒருவர் முன்னதாக பிபிசியிடம் கூறியிருந்தார்.

இன்னும் நான்கு அல்லது ஐந்து தினங்களில், புதிய தலைவரை நியமிப்பதற்காக இந்த உயர் மட்டக் கவுன்ஸில் சந்திப்பு ஒன்றை நடத்தும் என்றும் அந்தப் பேச்சாளரான முல்லா அப்துல் மனன் நியாசி கூறியுள்ளார்.

அந்தச் சந்திப்புக்கு தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா அக்தார் மன்சூர் அவர்களும் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த நியமனம் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் நடக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த கருத்தானது தலிபான்கள் அமைப்புக்குள் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது என்பதற்கான முக்கிய சமிக்ஞை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

பாகிஸ்தானுடன் சமரசப் பேச்சில் ஆர்வம் காட்டும் முல்லா மன்சூரை, பாகிஸ்தானுக்கு ஆதரவான வட்டாரங்களே தலிபான்களுக்குள் திணிப்பதாக சில தலிபான் முக்கியஸ்தர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

முல்லா ஒமாரின் மகன்:

talib2
முல்லா ஒமார்

 

முல்லா ஒமாரின் மகனை அவருக்கு அடுத்த தலைவராக நியமிக்க வேண்டும் என்று குறைந்தது தலிபான்களின் ஒரு பிரிவாவது விரும்புகிறது.

இந்தநிலையிலேயே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலிபான்களின் தலைவர் முல்லா மன்சூர் வெளியிட்டுள்ள ஒரு ஒலிப்பதிவுச் செய்தியில், தாம் போரைத் தொடரப் போவதாகவும், அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

வியாழன்ன்று தலிபான்களின் தலைவராக அறிவிக்கப்பட்ட அவர், தமக்கிடையிலான பிளவு எதிரிகளை பலப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

தகுதியற்றவர்களை, விசுவாசமற்றவர்களை தலிபான்கள் அமைப்பின் பதவிகளுக்கு நியமிக்க முடியாது என்றும் அவர் தனது செய்தியில் கூறியிருந்தார்.

சமாதான பேச்சு என்பது எதிரிகளின் ஒரு பிரச்சாரம் :

talib3

ஆனால், சமாதானப் பேச்சுவார்த்தைகளை எதிரிகளின் பிரச்சார தந்திரம் என்று அவர் நிராகரித்தார்.

இந்த அமைப்பில் இருந்து இப்படியான முரணான கருத்துக்கள் வெளிவருவது இதுதான் முதல் தடவை என்று பிபிசி செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

முல்லா ஒமார் போன்ற ஒரு தலைவரை ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுப்பது இனி தலிபான்களில் நடவாத காரியம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

தலிபான்களின் இராணுவ தளபதியான குவாம் ஷக்கீர் முல்லா மன்சூரின் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை என்ற செய்திகளை மன்சூரின் ஆதரவாளர்கள் நிராகரித்துள்ளனர்.

குவாண்டனாமோ குடாவின் முன்னாள் கைதியான ஷக்கீர், ஹெல்மண்ட் மாகாணத்தில் பெரும் பலத்துடனான ஆதரவுத் தளத்தை கொண்டிருப்பதோடு, தலிபான்களின் எதிர்காலத்தில் கணிசமான பங்களிப்பையும் செய்யக்கூடியவராவார்.

இராணுவ தளபதிகளின் ஆதரவைப் பெறுபவர்கள்தான் தலிபான்களின் பெரும்பான்மை ஆதரவை தக்கவைக்க முடியும். -BBC