போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம்: கொசாவோ நாடாளுமன்றம் அனுமதி

Kosovo1கொசாவோவில் கடந்த 1998-1999-ஆம் ஆண்டுகளில் அல்பேனிய கொரில்லாப் படையினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

அந்த நீதிமன்றத்தை அமைப்பதற்கு ஆதரவாக, 120 எம்.பி.களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 82 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
செர்பிய ராணுவத்துக்கு எதிரான சண்டையின்போது கொசாவோ விடுதலைப் படை (கே.எல்.ஏ.) அமைப்பினர், செர்பிய ராணுவத்துக்கும், அல்பேனியர்கள் அல்லாத பிற சிறுபான்மை இனத்தவருக்கும் எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை கொசாவோ அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம் அமைப்பதற்கு வழி வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள கொசாவோ நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அல்பேனிய இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கொசாவோவில், கே.எல்.ஏ. அமைப்பினர் இன்னும் போராட்ட நாயகர்களாகக் கருதப்படுவதால், இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

-http://www.dinamani.com