காபூலில் இராணுவம், போலிஸ்,அதிரடிப் படை மீது தலிபான்களின் வெறித் தாக்குதல்!:50 பேர் பலி

கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் அந்நாட்டு இராணுவம், போலிஸ் மற்றும் அமெரிக்க விசேட அதிரடிப் படையினர் மீது மேற்கொண்ட வெறித் தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டும் நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர்.

வெள்ளிக்கிழமை நிகழ்த்தப் பட்ட 3 வெவ்வேறு தாக்குதல்களில் போலிஸ் அகெடமியில் கொல்லப் பட்டவர்களில் 27 மாணவர்களும் இன்னொரு அமெரிக்க சேவை உறுப்பினரும் கூட அடங்குகின்றனர்.

தலிபான்களின் மிக நீண்ட காலத் தலைவராகச் செயற்பட்ட முல்லா ஒமர் 2013 இல் உயிரிழந்ததாக உத்தியோக பூர்வமாக அண்மையில் அறிவிக்கப் பட்டு புதிய தலைவரை நியமிப்பதில் பிளவுகள் ஏற்பட்டிருந்த நிலையிலும் தாம் இன்னமும் பலவீனம் அடையவில்லை எனக் காபூலில் நிகழ்த்தப் பட்ட இந்த மோசமான 3 தாக்குதல்களின் மூலம் தலிபான்கள் நிரூபித்துள்ளதாகக் கருதப் படுகின்றது.

முதலாவதாக காபூலின் மிகச் செறிவான மக்கள் தொகை கொண்ட இடம் ஒன்றில் டிரக்கில் பொருத்தப் பட்டிருந்த குண்டு வெடிக்கச் செய்யப் பட்டது. பின்னர் அமெரிக்க விசேட அதிரடிப் படையினரால் உபயோகிக்கப் பட்டு வந்த தளம் ஒன்றிட்கு அண்மையில் தலிபான்களுக்கும் அதிரடிப் படையினருக்கும் இடையே தொடர்ந்து சில மணி நேரங்களாகத் துப்பாக்கிச் சமர் நடைபெற்றது. போலிஸ் அகெடமி மற்றும் அமெரிக்கப் படைத் தளம் ஆகியவற்றின் மீது தொடுக்கப் பட்ட தாக்குதல்களுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்ட போதும் டிரக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் கடந்த சில வருடங்களில் காபூலில் தொடுக்கப் பட்ட மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல்களாக இவை பதியப் பட்டுள்ளன. இன்டெகிரிட்டி என்ற விசேட அதிரடிப் படையினரது பாசறை மீதான தாக்குதலில் 8 ஆப்கான் ஒப்பந்தக் காரர்களுடன் ஒரு சர்வதேசப் படை உறுப்பினரும் கொல்லப் பட்டதை நேட்டோ உறுதி செய்துள்ளது. ஐ.நா இன் கருத்துக் கணிப்பு படி இந்த வருட முதற் பாதியில் மாத்திரம் ஆப்கானில் குறைந்தது 5000 பொது மக்கள் கொல்லப் பட்டோ காயம் அடைந்தோ உள்ளனர் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் இன்னமும் ஏறக்குறைய 9800 அமெரிக்கத் துருப்புக்கள் நிலை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.4tamilmedia.com