நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்
கௌரவ முதலமைச்சர்
வடமாகாணம்
அன்புக்கும் பெருமதிப்புக்குரிய ஐயா‚
அநேக வணக்கங்கள்!
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயாவுக்கு வடபகுதி மக்கள் தமது நன்றியையும் பேராதரவையும் தெரிவிக்கிறார்கள்.
தாங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளால் நெருக்குதல்களுக்கு உள்ளாவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து தங்களைத் தெரிவு செய்த வடபகுதி மக்களாகிய நாம் மிகுந்த கவலையும் வேதனையும் அடைகின்றோம்.
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் போட்டியிட்டு வடபகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தாங்கள் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பை ஆதரித்து பிரசாரம் செய்வதில்லை என்ற முடிவை எடுத்தமையை வரவேற்று தங்களைத் தெரிவு செய்த மக்களாகிய நாம் எமது நன்றியையும் பேராதரவையும் இச்சந்தர்ப்பதத்தில் தங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.
தாங்கள் இத்தகைய முடிவுக்கு வந்தமைக்கான வலுவான காரணங்கள் பொதுமக்களாகிய எம்மை விட தங்களுக்கே நிதர்சனமானதாகும்.
தேர்தலுக்காக உணர்சிகரமான அறிக்கைகளையும் விடுதலைப்புலிகளையும் அழைக்கும் கூட்மைப்பிலுள்ள கட்சி உறுப்பினர்கள் மக்கள் நலன் சார்ந்து முடிவெடுப்பதில்லை என்பதையும் பணத்துக்கா சுகபோக வாழ்வுக்காக தமிழ் மக்களின் வாழ்வையும் அரசியல் உரிமைகளையும் பிராந்திய மற்றும் பேரினவாத சக்திகளிடம் அடகுவைத்து மக்களை ஏமாற்றும் அரசியல் செய்து வருவதையும் கடந்த 2 வருடங்களில் தாங்கள் நேரடியாகக் கண்டும் உணர்ந்தும் இருப்பீர்கள்.
இவ்வாண்டு வடமாகாண சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இன அழிப்பத் தீர்மானத்தை தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து நீக்கி த.தே.கூ. மக்களை ஏமாற்றும் போலியான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
வடமாகாண சபையில் உள்ள அமைச்சர்களும் ஏனைய உறுப்பினர்களும் மக்களுடைய அன்றாடப் பிரச்சினை பற்றிய உண்மை நிலையைத் தங்களுக்குத் தெரியப்படுத்தாதுடன் மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் எம்மைவிட தாங்களே நன்கு அறிந்திருப்பீர்கள். சுன்னாகம் நிலத்தடி நீர் மின்னிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெயால் பாதிக்கப்பட்டதன் உண்மைநிலையை வடமாகாண விவசாய அமைச்சரும் சுகாதார அமைச்சரும் மறைத்து மக்கள் முன் தங்களை அவமானப்பட வைத்ததை தாங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். யாருக்காக யாரைப் பாதுகாக்க நிபுணர்குழுவைக் கொண்டு மாசுகலந்த நீரை அருந்தலாம் என்று அறிக்கை விட்டதையும் நீங்கள் அறியாதவர் அல்ல.
மேலும் யார் யாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள உதிரிக் கட்சி உறுப்பினர்கள் பணம் பெற்றுத் தமிழின அழிப்பு அரசியல் செய்கின்றனர் என்ற விடயம் மக்களாகிய எம்மை விட தங்களுக்கே நன்கு தெரிந்திருக்கும். மக்களுக்கு உண்மைகள் தெரியப்படுத்தப்படாது பொய்யான வாக்குறுதிகளும் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளும் வெளியிடப்படுவதைக் கண்டு மிகுந்த வேதனையுற்றிருப்பீர்கள்.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டமைக்காக வட பகுதி மக்களாகிய நாம் தங்களுக்கு வாக்களிக்க வில்லை என்பதைத் தாங்கள் அறியாதவர் அல்ல. நீதியரசராக இருந்தவர் என்பதுடன் தங்களது நீதியானதும் உண்மையை எடுத்துக் கூறும் துணிச்சலான செயற்பாடுகளிலும் நம்பிக்கை வைத்தே மாகாணசபைத் தேர்தலில் வடபகுதி மக்களாகிய நாம் ஏகோபித்த ஆதரவை தங்களுக்கு வழங்கியிருந்தோம்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்மைப்பை ஆதரித்து அறிக்கை விடவும் தங்களைத் தேர்தல் மேடையில் ஏற்றி வாக்குகளை சம்பாதித்து தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் செய்வதற்கும் த.தே.கூ. தங்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருவதை நாம் அறிகின்றோம். இந்த நிலையில் தாங்கள் வேடதாரிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டீர்கள் என்ற பெரு நம்பிக்கை மக்களாகிய எம்மிடம் உண்டு.
“என்னைக் கூட்டமைப்பினர் வடமாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக இறங்கி அக்கட்சி அபேட்சகர்களுக்காக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என்பதே எனது கருத்து. என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கட்சிகளின் நலனைவிட எமது மக்களின் நலனும் நலவுரித்துக்களுமே முதன்மை பெறவேண்டும் என்பது எனது கருத்து.”
“மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமது மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். அதனை உணர்ந்து அவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மீகக் கடமையைச் சரிவரச் செய்வதற்கு நான் துணையாக நிற்பேன்”.
மேற்கூறிய தங்கள் கொள்கை நிலைப்பாட்டை – வேண்டுகோளை வடபகுதி மக்களாகிய நாம் வரவேற்பதுடன் நீதியின்பால் கரிசனை உள்ள தங்களது துணிச்சலான கொள்கைப் பற்றுதிக்குத் தலைவணங்கி எமது பேராதரவைத் தெரிவிப்பதுடன் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றவும் காத்திருக்கின்றோம்.
இன்று வட மாகாண சபையால் இந்தியாவின் ஆலோசனைக்கமைய தங்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட இருப்பதாக அறிகின்றோம். தங்களைத் தெரிவு செய்த மக்களாகிய நாம் இதற்கு ஒருபோதும் உடன்படப்போவதில்லை என்பதையும் என்றும் தங்களுக்குப் பக்கபலமாக இருப்போம் என்பதையம் .தங்களுக்குத் தெரியப் படுத்துகின்றோம்.
நன்றி.
வட பகுதி வாழ் தமிழ் பேசும் மக்கள்
-http://www.pathivu.com