‘பள்ளி மாணவர்கள் கட்டாயம் பன்றி இறைச்சி உண்ண வேண்டும்’: புதிய விதிமுறையால் கிளம்பிய எதிர்ப்புகள்

school_big_001பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மேயர் ஒருவர் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் உணவு பட்டியலில் பன்றி இறைச்சியை சேர்க்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு பிரான்ஸில் உள்ள Chalon-sur-Saone என்ற நகரின் மேயராக Gilles Platret என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர். எதிர்வரும் செப்டம்பர் மாத கல்வி ஆண்டு முதல் நகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவில் பன்றி இறைச்சியை சேர்ப்பது கட்டாயமாக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

மேயரின் இந்த அறிவிப்பிற்கு இஸ்லாம் மற்றும் யூத இனத்தவர்களிடையே பலத்த எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.

மேயரின் குடியரசு கட்சியின் முன்னாள் தலைவரான சர்கோஸி, தற்போதைய கல்வி துறை அமைச்சரான Najat Vallaud-Belkacem உள்ளிட்டவர்கள், ‘மேயரின் இந்த நடவடிக்கை மாணவர்களை பிணையக்கைதிகளாக மாற்றுவதற்கு சமம்’ என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முஸ்லீம் நீதித்துறை பாதுகாப்பு கழகத்தின் சார்பாக வழக்கு தொடர்ந்துள்ள Karim Achou என்ற வழக்கறிஞர் கூறுகையில், இஸ்லாமிய மதக்கோட்பாடுகளின் படி, பன்றி இறைச்சியை உண்ணக்கூடாது, அது ஒரு தடை செய்யப்பட்ட உணவு என்ற நிலை இருக்கும்போது, அந்த மதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பன்றி இறைச்சியை வற்புறுத்தி உண்ணச்சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

அதே இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த Jean-Baptiste Jacquenet-Poillot என்பவர் கூறுகையில், மேயரின் இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் மதச்சார்பின்மை மீதாக உள்ள கடுமையான சட்டங்களுக்கு எதிரான துரோகம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டனங்களுக்கு பதில் அளித்த மேயரின் வழக்கறிஞர், ஒவ்வொரு மதக்கோட்பாடுகளை பின்பற்றும் ஒவ்வொரு மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனி தனி சேவைகளை வழங்க வேண்டும் என்ற அதிகாரங்களை மதச்சார்பின்மை சட்டங்களில் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை தொடர்பாக பிரான்ஸ் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது.

நீதிபதியின் தீர்ப்பின் அடிப்படையிலேயே பள்ளி மாணவர்களின் உணவு பட்டியலில் பன்றி இறைச்சி சேர்க்கப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

-http://world.lankasri.com