பியாங்யாங் : வடகொரிய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக ஓராண்டுக்கு முன் பொறுப்பேற்ற துணைப் பிரதமருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
வட கொரியாவில் ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தற்போது ஆட்சியை தலைமையேற்று நடத்தி வருகிற கிம் ஜாங் யுன்னின் கொள்கைகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் துணைப்பிரதமர் சூ யாங் கான் கடுமையாக விமர்சித்து குரல் கொடுத்திருந்தார்.
இது குறித்து அறிந்ததும், அவருக்கு கிம் ஜாங் யுன் மரண தண்டனை விதித்ததாகவும், அவர் கடந்த மே மாதம், துப்பாக்கியால் சுடும் படையால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
63 வயதான சூ யாங் கான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் துணைப்பிரதமர் பதவிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சுட்டுக்கொல்லப்பட்டது உறுதி என்றால், இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 2-வது தலைவர் சூ யாங் கான் ஆவார்.
ஏற்கனவே கிம் ஜாங் யுன் கலந்து கொண்ட ராணுவ அணிவகுப்பு ஒன்றின்போது ராணுவ அமைச்சர் ஹயான் யாங் சோல், தூங்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கடந்த ஏப்ரல் மாதம் விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.