சீன நாணய மதிப்பிறக்கம் ஏற்படுத்தும் அதிர்வலை

yuan12 ஆகஸ்ட் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:23 ஜிஎம்டி

தனது நாணயமான யுவானை அடுத்தடுத்து இரண்டாவது நாளாக மதிப்பிறக்கம் செய்ததன் மூலம் சீனா உலகெங்கும் உள்ள நிதிச் சந்தைகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்த நகர்வு உலகின் இரண்டாவது பெரிதான சீனப் பொருளாதாரம் குறித்த கவலைகளை அதிகரித்து, உலக மட்ட நாணய போர் பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனா தனது நாணயமான யுவானின் மதிப்பை மீண்டும் குறைத்திருக்கிறது. டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு இன்று ஒரு சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் இந்த நடவடிக்கை நிதிச் சந்தைகளுக்கு புதிய அதிர்ச்சியளித்திருப்பதோடு, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனப் பொருளாதாரம் குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான யுவானின் மதிப்பு இன்றும் குறைக்கப்பட்டிருப்பதால், நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு பலவீனமான நிலையை அடைந்துள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கையின் காரணமாக, சீனாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவானின் மதிப்பு குறைக்கப்பட்டிருப்பதால், பிற நாணயங்களின் மதிப்பும் குறைந்துள்ளது. இதனால், ஆசியச் சந்தைகளில் ஏற்பட்ட இழப்புகளின் காரணமாக, ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியுடன் இன்றைய வர்த்தகத்தைத் துவங்கின.

சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமையன்று சீன நாணயத்தின் மதிப்பு சுமார் 2 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது.

கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, சீனாவின் ஏற்றுமதி 8 சதவீதம் அளவுக்கு ஜூலையில் குறைந்திருந்தது. இதனால், சீனா மந்த நிலையை நோக்கி செல்கிறது என்ற அச்சம் உருவானது.-BBC