ஈராக்கில் குர்து படையினரை ரசாயன ஆயுதங்களால் தாக்கிய ஐஎஸ் தீவிரவாதிகள்

isis_boystatement_001பாக்தாத்: ஈராக்கில் குர்து இனப் படையை அழிக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று அமெரிக்கா நம்புகிறது.

ஈராக்கில் உள்ள குர்து இனப்படையினர் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ISIS தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் துவங்கிய பிறகு குர்து இன வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஈராக் அல்லது சிரியாவில் உள்ள பழைய சேமிப்பு கிடங்கில் இருந்து தடை செய்யப்பட்ட கடுகு வாயு ஆயுதங்களை பெற்றிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு தங்களிடம் இருந்த அனைத்து ரசாயன ஆயுதங்களையும் அழித்துவிட்டதாக சிரியா தெரிவித்தது. ஆனால் சிரியா அரசு யாருக்கும் தெரியாமல் ரசாயன ஆயுதங்களை ரகசிய இடத்தில் பதுக்கி வைத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளில் கடுகு வாயுவை நிரப்பி குர்து இன வீரர்களை தாக்கியுள்ளனர். கடுகு வாயு முதன்முதலாக முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. கடுகு போன்ற வாசனை வருவதால் தான் அதற்கு பெயர் கடுகு வாயு. கடுகு வாயுவால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு 12 மணிநேரங்கள் கழித்து தான் உடல்நலம் பாதிக்கப்படும்.

இதனால் உயிருக்கு பாதிப்பு இல்லை எனினும், நிரந்தர பாதிப்பு ஏற்படும். கடுகு வாயு தாக்குதலுக்குள்ளானவர்களில் பலருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது, மேலும் பலருக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com