லிபியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும், உள்ளூர் ஆயுதக் குழுவுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 150 முதல் 200 பேர் வரை படுகொலை செய்யப்பட்டதாக பிரான்ஸுக்கான லிபியத் தூதர் சிபானி அபுஹமூத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
லிபியாவின் சிர்டே நகரில், முஸ்லிம் மதத் தலைவர் ஒருவரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த வாரம் படுகொலை செய்தனர்.
அதையடுத்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை எதிர்க்கும் உள்ளூர் ஆயுதக் குழுவினருக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்தச் சண்டையில், நகரிலுள்ள பொதுமக்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர்.
தற்போது லிபியாவில்தான் உண்மையான இனப் படுகொலை நடைபெற்று வருகிறது.
உலக நாடுகள் அதில் தலையிட்டு, அந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
“இரட்டை வேடம்’: லிபியாவின் தோப்ருக் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற அந்த நாட்டு அரசு, அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிர்டே நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்தி வரும் வன்முறைகள் குறித்தும் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் விவகாரத்தில் வல்லரசு நாடுகள் இரட்டை வேடம் போடுகின்றன.
இராக்கிலும், சிரியாவிலும் அவர்களுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வரும் அந்த நாடுகள், லிபியாவில் அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை என அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2010-லிருந்து 2012-ஆம் ஆண்டுவரை பல்வேறு அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்தன.
அரபு வசந்தம் என்றழைக்கப்படும் அந்தக் காலகட்டத்தில், லிபியாவில் 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாஃபிக்கு எதிராக வன்முறைப் போராட்டம் வெடித்தது.
அதில் கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவுடன் ஆட்சியமைத்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, போட்டிக் கிளர்ச்சிக் குழுவினர் தலைநகர் திரிபோலியில் போட்டி நாடாளுமன்றம் அமைத்தனர்.
அதையடுத்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆட்சியாளர்கள், லிபியாவின் துறைமுக நகரான தோப்ருக்கில் தலைமையகத்தை அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
-http://www.dinamani.com