சீனாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட ரசாயன கிடங்கில் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான டன் சோடியம் சயனைடு சேமிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சீனா நாட்டின் டியாஜின் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் கடந்த 12 ஆம் திகதி இரண்டு பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டது.
இதில் பொதுமக்கள், ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் என 112 பேர் சிக்கி உயிரிழந்தனர், மேலும் 722 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சேமிப்பு கிடங்கில் நூற்றுக்கணக்கான டன் சோடியம் சயனைடு என்னும் கொடிய விஷ ரசாயனம் சேமிக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த சோடியம் சயனைடு ரசாயனம் கலந்த நச்சுகாற்றை சுவாசித்தால் அல்லது உட்கொண்டால் அது ஆக்சிஜன் செயல்பாட்டை முடக்கி மரணத்தை ஏற்படுத்தும்.
வெடி விபத்து பகுதியில் டன் கணக்கில் சேமிக்கப்பட்டிருந்த சயனைடு ரசாயனத்தில் 70 சதவிகிதமும் சட்டத்திற்குபுறம்பானது என்ற தகவலை அந்நாட்டு ராணுவமும் உறுதி செய்துள்ளது.
மேலும் 217 பேரைக் கொண்ட ரசாயனம் மற்றும் அணு வல்லுனர்கள் குழு ஒன்றும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
சீன ஊடகங்களின் தகவல் படி 700 டன் சோடியம் சயனைடு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
-http://world.lankasri.com