அமெரிக்க பிணையக் கைதியை பலமுறை பலாத்காரம் செய்த ஐஎஸ் தலைவர் பாக்தாதி

kayla-muellerநியூயார்க்: அமெரிக்க பிணையக் கைதியான கைலா முயல்லரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கைலா முயல்லர்(26) என்ற சமூக சேவகி கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரியாவில் உள்ள ஆலெப்பா நகரில் வைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானார்.

கைலா கடத்தப்பட்ட பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நிதிகளை கவனித்து வந்த அப்துல் சய்யபின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார். எப்பொழுது எல்லாம் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி சய்யபின் வீட்டிற்கு சென்றாரோ அப்பொழுது எல்லாம் அவர் கைலாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என அமெரிக்க தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

கைலாவை பாக்தாதி பலமுறை பலாத்காரம் செய்ததாக தங்களிடம் அரசு தெரிவித்ததாக அவரின் பெற்றோர் கார்ல் மற்றும் மார்ஷா முயல்லர் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் சிரியாவில் உள்ள அல் ஒமர் நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் சய்யப் பலியானார். அவரது மனைவி உம் சய்யப் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தான் கைலா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. கைலாவுடன் இரண்டு யசிதி இன பெண்களும் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

tamil.oneindia.com