பாங்காக்கில் இரட்டை குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு… பிரதமர் மோடி கடும் கண்டனம்

modithaiடெல்லி : தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இந்து ஆலயம் அருகே நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இத்தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிட்லாங்க மாவட்டம் ரட்சாபிரசாங் என்ற பகுதியில் பிரம்மாண்ட வணிகவளாகம் ஒன்று உள்ளது. அதன் அருகில் பிரம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த இந்து ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று மாலை (திங்கட்கிழமை) வணிக வளாகம் அருகே 2 குண்டுகள் அடுத்தடுத்து பங்கரமாக வெடித்துச் சிதறின. இதில் ஆலயத்திற்கு வந்தவர்கள், சுற்றலாப் பயணிகள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கரவாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாக பாங்காக் போலீசார் தெரிவித்தனர். குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உடல்கள் சாலைகளில் சிதறிக்கிடந்ததாக அங்கு குவிந்துள்ள வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தாய்லாந்தில் குண்டு வெடிப்பு என்பது மிகவும் அரிதாகவே நிகழும். கடந்த ஆண்டு மே மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அவ்வப்போது மோதல்கள், கலவரங்கள் மட்டும் வெடிக்கும்.

இந்நிலையில், தற்போது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தாய்லாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது… பாங்காங்க் குண்டு வெடிப்புக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

-tamil.oneindia.com