சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?

samapanthan14புதிதாக கூடவுள்ள நாட்டின் எட்டாவது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கலாமென அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியேற்கவுள்ள ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமையவுள்ளமை தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்களெனவும் அதில் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்படுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஐ.தே.க வும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்குமாயின் அடுத்ததாக அதிகூடிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா தாங்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி ஏற்கப் போவதில்லையெனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்திற்கு வெளியே இருக்கக் கூடிய கட்சிகளில் அதிகூடிய ஆசனங்களை தம்வசம் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டியேற்படும். அந்தவகையிலேயே இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: