சிரியாவின் புராதன பால்மைரா நகரில் தொல்லியல் துறைத் தலைவராக இருந்த காலித் அல்-அஸாத், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டின் தற்போதைய தொல்லியல் துறைத் தலைவர் மாமூன் அப்தெல்கரீம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பால்மைரா நகரில் காலித் அல்-அஸாத் செவ்வாய்க்கிழமை தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டார்.
நாட்டின் மிகச் சிறந்த தொல்பொருள் நிபுணர்களில் ஒருவரை சிரியா இழந்துள்ளது.
50 ஆண்டுகளாக பால்மைரா தொல்பொருள் துறைத் தலைவராக அவர் இருந்துள்ளார்.
அவருக்கு தற்போது 82 வயது ஆகிறது.
தலை துண்டிக்கப்பட்ட பிறகு அவரது உடல் பால்மைராவின் புராதனச் சின்னங்களின் முன்பு தொங்கவிடப்பட்டது என்றார் அவர். எனினும், இதுதொடர்பாக வலைதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களில், சாலையின் மையத் தடுப்புப் பகுதியில், மின் விளக்குக் கம்பத்தில் அவரது உடல் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த உடலுடன் கட்டப்பட்டிருந்த பதாகையில், அந்த உடல் காலித் அல்-அஸாதுடையது எனவும், வெளிநாடுகளில் “மத நிந்தனையாளர்’களுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்றதன் மூலம் சிரியா அரசின் அனுதாபியாகச் செயல்பட்டது, பால்மைராவிலுள்ள “சிலை’களைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவராக இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
சிரியா அரசு அதிகாரிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் அந்தப் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்திய சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு, பால்மைராவின் பொதுச் சதுக்கத்தில், பொது மக்கள் முன்னிலையில் காலித் அல்-அஸாத் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
-http://www.dinamani.com